

சமூகவலைத்தளங்கள் மூலம் நேரடியாக குறைகள் கூறுவதை வீரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவாத் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் தேஜ் பிரதாப் சிங் என்பவர் வீரர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்றும் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்றும் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் நாயக் யக்யா பிரதாப் என்பவரும் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ‘‘உயரதிகாரிகள் வீரர்களை தங்களது உதவியாளர்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்கள் மூலம் நேரடியாக குறைகளை வெளிப்படுத்துவதை வீரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவாத் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘‘ராணுவ வீரர்கள் குறைகள் தீர்ப்பு பெட்டகம் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை கடிதமாக எழுதி முறையிடலாம். அல்லது என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். எக்காரணம் கொண்டும் புகார் தெரிவித்த வீரரின் பெயர் வெளியிடப்பட மாட்டாது. இந்தப் புகார் கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடலாம். வீரர்கள் மூத்த அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’’ என்றார். அண்மையில் குறை தெரிவித்த நாயக் ராணுவத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் என்றும் அவர் உயரதிகாரிகளுக்கு உதவியாளராக பணியாற்றவில்லை என்றும் ராணுவ தளபதி பிபின் ராவாத் தெரிவித்துள்ளார்.