

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர் திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆய்வுசெய்து பல்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி பஞ்சாப் தேர்தல் வேட்பாளர்களில் 15 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 77 பேருக்கு எதிராக கடும் குற்ற வழக்குகள் உள்ளன. தேர்தல் வழக்குகள் முதல் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், ஊழல் வழக்குகள் வரை இவர்கள் மீது உள்ளன. 77 பேரில் 4 பேர் மீது கொலை வழக்கும் 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் உள் ளது. கட்சிரீதியாக அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் 12 சதவீத வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களாக உள்ளனர். இதற்கு அடுத்து ஆம் ஆத்மி கட்சி (11%), சிரோமணி அகாலி தளம் (11%), பாஜக (9%), அப்னா பஞ்சாப் கட்சி (9%) ஆகிய கட்சிகளில் உள்ளனர்.
சுமார் 16 சதவீத வேட்பாளர்கள் அதாவது 178 பேர் ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் சொத்து கொண்டவர்கள். ரூ.10 லட்சத்துக் கும் குறைவாக சொத்து உள்ளதாக 341 பேர் அறிவித்துள்ளனர்.
கட்சிரீதியாக அகாலி தளம் கட்சி வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். இதற்கு அடுத்து காங்கிரஸ் (88%), பாஜக (87%), ஆம் ஆத்மி (63%) ஆகிய கட்சிகளில் கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.
பஞ்சாபில் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.49 கோடி ஆகும். கபூர்தலாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரானா குர்ஜித் சிங் தனது சொத்து மதிப்பு ரூ.169 கோடி என கூறியுள்ளார். அபோஹார் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சிவலால் தோடா தனக்கு ரூ.141 கோடி சொத்து உள்ளதாக கூறியுள் ளார். 7 வேட்பாளர்கள் தங்கள் சொத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
680-க்கும் மேற்பட்ட அதாவது 60 சதவீத வேட்பாளர்கள் 5 முதல் பிளஸ் 2 வரை படித்துள்ளனர். 32 சதவீத வேட்பாளர்கள் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பும், 6 சதவீத வேட்பாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.
மொத்த வேட்பாளர்களில் 454 பேர் 51 முதல் 70 வயது வரையும் 35 பேர் 71 முதல் 85 வயது வரையும் கொண்டவர்கள். பஞ்சாபில் ஆண் வேட்பாளர்கள் 1063 பேர் போட்டியிடும் நிலையில் பெண் வேட்பாளர்கள் 81 பேர் மட்டுமே உள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கு போட்டியிடுகிறார்.