

டெல்லியில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேளிக்கையின் போது, நடிகர் அர்ஜுன் ராம்பால் தன்னைத் தாக்கியதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற வில்லை என நடிகர் மறுத்துள்ளார்.
டெல்லி லுத்யன்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இசைக்கேற்ப நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பாலும் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். அப்போது, அவரை புகைப்படக்கலைஞர் ஒருவர் கேமராவால் படம் பிடித்தபோது, திடீரென ஆவேச மடைந்த நடிகர், கேமராவைப் பறித்து, இளைஞர்கள் நடனமாடும் கூட்டத்திற்குள் வீசியுள்ளார்.
இதில், டெல்லியைச் சேர்ந்த ஷோபித் என்பவரது தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து, அவர், அர்ஜுன் ராம்பால் தன்னைத் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் பற்றி விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தம் மீதான குற்றச்சாட்டுகளை அர்ஜூன் ராம்பால் மறுத்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேளிக்கையின்போது, இளைஞர் ஒருவர் காயமடைந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. யாரும் தாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.