

டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, மரணமடைந்த வழக்கில், குற்ற வாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தனது நண்பருடன் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டி ருந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொடூர மாக வீசி எறிந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் கைது செய்யப் பட்ட 6 பேரில் ராம்சிங் என்ற குற்ற வாளி திகார் சிறையில் 2013-ம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கு குறைந்தவர் என்ற அடிப்படை யில் சிறார் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய குற்றவாளிகளான அக்ஷய், பவன், வினய் சர்மா, முகேஷ் ஆகிய 4 பேர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் 2014-ம் ஆண்டு உறுதி செய்தது.
இந்நிலையில், 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் தண்டனைக் குறைப்பு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
இக்கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தனது மரண வாக்குமூலத்தில் நடந்த சம்பவங்களை தெளிவாக தெரிவித் துள்ளார். குற்றவாளிகளையும் அடையாளம் காட்டியுள்ளார். குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர் சாட்சியங்களும் அதை உறுதி செய்துள்ளன. குற்ற சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் (டிஎன்ஏ) சோதனை, குற்றவாளிகள் மற்றும் மரணமடைந்த மாணவியின் ரத்த மாதிரிகளை உறுதி செய்துள்ளன. சம்பவத்தின்போது உடனிருந்த மாணவியின் நண்பரும் தனது சாட்சியத்தில் தெளிவாக சம்பவங் களை விளக்கியுள்ளார். அவை அனைத்தும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டு சதி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அபூர்வமான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு அந்த பிரிவின் கீழ் வரவில்லை என்றால் வேறு எந்த வழக்கை கொண்டு வர முடியும். குற்றவாளிகளால் அந்த மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு, ஒரு ஜடப் பொருளாக மட்டுமே நினைத்து போகப் பொருளாக பயன்படுத்தப்பட்டு உள்ளார். இது ஒரு பெண்ணின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மனித உரிமை மீறல். இந்த வழக்கின் தீர்ப்பு பெண்கள் மீதான பார்வையை மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.
ஒரு சமூகம் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதைப் பொறுத்து தான் அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்று விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். பெண்களை சமமாக நடத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வழக்கு உதவும். இதுபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கருணை காட்ட முடியாது. எனவே, அவர்களது தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.