

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்தியப் பெண் உஸ்மாவை 'இந்தியாவின் மகள்' என ட்விட்டரில் வரவேற்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தன்னைத் துப்பாக்கி முனையில் பாகிஸ்தான் இளைஞர் திருமண செய்ததாகக் கூறிய இந்தியப் பெண்ணை, உஸ்மாவை பாதுகாப்புடன் நாடு திரும்ப இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டதையடுத்து அவர் இன்று (வியாழக்கிழமை) நாடு திரும்பினார்.
அவரை வரவேற்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இந்தியாவின் மகள் உஸ்மாவை வரவேற்கிறேன். உங்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்கு வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் உஸ்மா. இவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த தாகிர் அலியும் காதலித்துள்ளனர். மலேசியாவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
கடந்த மே 1-ம் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்ற உஸ்மாவுக்கும், தாகிருக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், தன்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டித் திருமணம் செய்ததாகவும், தன்னை இந்தியா செல்ல அனுமதிக்குமாறும் கோரி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உஸ்மா தஞ்சம் புகுந்தார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த உஸ்மா, தன்னைத் துப்பாக்கி முனையில் தாகிர் அலி திருமணம் செய்ததாகவும், இந்தியா திரும்பிச் செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தலசீமியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதற்கான மருத்துவ அறிக்கையையும் நீதிமன்றத்தில் உஸ்மா கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மொசின் அக்தர் கியானி, இந்தியா செல்ல உஸ்மாவுக்கு அனுமதி வழங்கியதுடன், வாகா எல்லை வரை போலீஸார் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். முன்னதாக, தாகிர் அலி தனது மனைவியைப் பார்க்க நீதிபதியிடம் அனுமதி கோரினார். ஆனால், கணவரைப் பார்க்க விரும்பவில்லை என உஸ்மா மறுத்துவிட்டார்.
இந்நிலையில், உஸ்மா இன்று நாடு திரும்பியுள்ளார்.