

‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ் டெல்லி பதிப்பின் செய்திப் பிரிவு முன்னாள் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கே.கே. கட்யால் நேற்று காலமானார்.
உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் நேற்று காலமானார் அவருக்கு வயது 88.
‘தி இந்து; (ஆங்கிலம்) டெல்லிப்பதிப்பு 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், அதன் செய்திப்பிரிவின் முகமாக விளங்கினார். தி ஸ்டேட்ஸ்மேன், இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
பாகிஸ்தானின் ஜங் பகுதியைச் சேர்ந்தவரான கட்யால், பரவலான அரசியல் மற்றும் தூதரக அளவிலான தொடர்புவட்டத்தைக் கொண்டிருந்தார். ஏராளமான பயணங்களை மேற்கொண்டுள்ள அவர், பல்துறை ஈடுபாடு கொண்டிருந்தார்.
‘தி இந்து’ வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயரைக் கொண்ட கே.கே. கட்யால், இந்தியா பாகிஸ்தான் இடையே உறவை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். ‘தி இந்து’வில் இருந்து 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, தெற்காசிய ஊடக சங்கத்தின் (எஸ்ஏஎஃப்எம்ஏ) இந்தியப் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கட்யாலுக்கு தர்ஷன் என்ற மனைவியும், அனிதா, சுகிதா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் ஊடகவியலாளர்களாக உள்ளனர்.