

டெல்லியில் உள்ள 3 மாநகராட்சி களுக்கு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என இரு வேறு கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மாநகராட்சி களில் தலா 104 வார்டுகளுக்கும், கிழக்கு டெல்லியில் உள்ள மாநகராட்சியில் 64 வார்டுகளுக் கும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கோரிக்கையை ஏற்காமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலமே தேர்தல் நடத்தப்பட்டது.
ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சுயேச்சைகள் என மொத்தம் 2,537 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். 1.32 கோடி வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
ஒருசில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் முறையாக இயங்க வில்லை என புகார்கள் எழுந்தன. இதனை முதல்வர் கேஜ்ரிவால் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 220 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், சிவோட்டர் ஏபிபி கருத்து கணிப்பில் 218 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி 24 இடங்களிலும் காங்கிரஸ் 22 இடங்களையும் கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.