

இடதுசாரி முன்னணியினர் கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டியை, எதிர்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
எப்போதும், உம்மன் சாண்டியை தீவிரமாக விமர்சிக்கும் அச்சுதானந்தன், கண்ணூர் கல் வீச்சு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில், கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்து திருவனந்தபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டிவின் உடல் நிலை சீராக உள்ளது.
கேரள காவல் துறையின் சார்பில் தடகளப் போட்டியின் நிறைவு விழா கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் உம்மன் சாண்டி கார் மீது சோலார் பேனல் ஊழல் தொடர்பாக உம்மன் சாண்டியைக் கண்டித்து போராடி வரும் இடதுசாரி முன்னணியினர் கல் வீசினர். இதில் கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், சாண்டியின் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.