சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். சுக்மா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்திலேயே நக்சல்கள் நடமாட்டம் மிக அதிகமுள்ளதாக அறியப்பட்ட பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்று.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 9.15 மணியளவில் சுக்மா மாவட்டம் கொட்டச்சேரு பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நக்சலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக பிடிஐ நிறுவனத்துக்கு அதிகாரி ஒருவர் கூறும்போது, "சுக்மா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் இஞ்ரம் - பேஜ்ஜி பகுதிகளுக்கு இடையேயான சாலைப் பணிகளை கவனித்து பாதுகாப்பு கொடுப்பதற்காக சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய தனி அணி ஒன்று உள்ளது.

சிஅர்பிஎப்-ன் 219-வது படைப்பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்கள் அடங்கிய அணியானது இன்று காலை 09.15 மணி அளவில் கொட்டாச்சேரு கிராமம் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்து தாக்குதலில் ஈடுபட்ட நக்சல்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 11 வீரர்கள் பலியாகினர். அவர்களிடமிருந்து 10 துப்பாக்கிகளையும் 2 ரேடியோ கருவிகளையும் நக்சல்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்க கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் கோப்ரா படைப் பிரிவனரும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in