

'அரசியலில் களமிறங்கும் தனது முடிவில் மாற்றமில்லை' என, மணிப்பூரின் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா உறுதியாக கூறியுள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா (44) கடந்த செவ்வாய் கிழமையன்று, போராட்டத்தை வாபஸ் பெற்று, அரசியலில் நுழைவதாக அறிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அவரின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிருப்தி தெரிவித்ததோடு, சில தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஷர்மிளாவுக்கு மிரட்டல் கூட வந்தது.
எனினும், ஷர்மிளா தனது முடிவில் உறுதியாக உள்ளார். வரும் 2017-ம் ஆண்டு மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியலில் நுழையும் எண்ணத்தில் மாற்றமில்லை என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஆம், நான் மாநில முதல்வராக விரும்புகிறேன். முதல்வர் பதவியில் நான் அமர்ந்துவிட்டால், சர்ச்சைக்குரிய ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறலாம் அல்லவா?. ஒருவேளை தேர்தலில் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை என்றால், நான் என் வழியில் செல்வேன்' என்றார்.