

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவதற்கு, வெறும் வார்த்தைகளால் அல்லாமல், வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எல்லையில் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்த மீறலில் பாகிஸ்தான் ஈடுபடும் நிலையில், அது தொடர்பாக எடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வெறும் வார்த்தைகளில் மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம். வேறு வழிவகைகளை கண்டறிவது பற்றி யோசிப்போம்.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதால், அங்கிருந்த கிராமப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விவகாரத்தில கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறோம். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்களில் பாகிஸ்தான் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளாரா? அல்லது ராணுவம் அவரின் கட்டுப்பாட்டில் இல்லைய எனத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், எல்லையில் வசிக்கும் மக்களை பாதுகப்பதற்காக இந்தத் தாக்குதலை நாம் முறியடிக்க வேண்டும்.
இரு நாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்கள் நிலையில் பேச்சு நடத்தப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அமெரிக்காவில் சந்தித்தபோது முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்படி பேச்சு எதுவும் நடைபெறவில்லை. எல்லையில் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இயக்குநர்கள் நிலையிலான அந்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா விரும்பாது என்பதை நவாஸ் ஷெரீப் நன்கு அறிவார். ஆனால், தனது நாட்டினரை திருப்திப்படுத்துவதற்காக இதுபோன்று அவர் பேசி வருகிறார்.
போரில் இந்தியா வென்ற பகுதிகளை மீண்டும் பாகிஸ்தான் வசம் ஒப்படைப்பதற்கு பிரதிபலனாக காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை பாகிஸ்தான் வலியுறுத்தக் கூடாது என்று இரு நாடுகளுக்கு இடையே தாஷ்கண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதை மறுந்துவிட்டு பாகிஸ்தான் இவ்வாறு பேசி வருகிறது” என்றார் உமர் அப்துல்லா.
ஜம்மு எல்லைப் பகுதியில் உள்ள 6 இடங்களில் இந்திய ராணுவ நிலைகள் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு நிலைகள் மீது சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.