

பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அதிநவீன செயற் கைக்கோள் தொலைபேசிகளை பயன்படுத்தியுள்ளனர். அவர்களில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தானில் உள்ள தாயாருடன் கடைசியாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
அந்த உரையாடலை இந்திய உளவுத் துறையினர் இடைமறித்துக் கேட்டுள்ளனர். கண்ணீர்மல்க பேசிய அந்த தாய், தற்கொலைப் படை தீவிரவாதியாக பலியாவதற்கு முன்பு உணவு சாப்பிடுமாறு கூறியுள்ளார்.
மேலும் 3 தொலைபேசி உரை யாடல்களை உளவுத் துறையி னர் இடைமறித்து பதிவு செய் துள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தத் தகவல்கள் வெளியிடப்பட வில்லை.
ஆளில்லா உளவு விமானம்
இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ஹெரோன் ஆளில்லா உளவு விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. அந்த விமானங்கள் பதான்கோட் விமான தளத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மனித உடலின் வெப்பத்தை அளவிட்டு அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருப்பதை உளவு விமானம் கண்டறியும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் விமானப் படையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் ஊடுருவியபோது ஹெரோன் உளவு விமானம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து தீவிரவாதிகள் ஊடுருவலை விமானப் படை வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உளவாளியிடம் விசாரணை
ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்த விமானப் படையின் முன்னாள் வீரர் ரஞ்சித்தை டெல்லி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் பதான்கோட் விமானப் படை தளத் தில் பணியாற்றியவர் ஆவார்.
எனவே அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த உளவுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று அவரின் போலீஸ் காவல் வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவரின் வலையில் விழுந்த ரஞ்சித், இந்திய விமானப் படையின் முக்கிய ஆவணங்களை ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலீஸ் எஸ்பி கடத்தல்
பஞ்சாப் மாநிலத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் ஒரு வாடகை காரை பயன்படுத்தியுள்ளனர். அந்த கார் கரடுமுரடான பாதையில் சென்றபோது பழுதாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த பஞ்சாப் போலீஸ் எஸ்.பி. ஒருவருக்கு சொந்தமான காரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அந்த காரில் எஸ்.பி, அவரது சமையல்காரர், நண்பர் ஆகியோர் இருந்துள்ளனர்.
சிறிது தொலைவு போலீஸ் எஸ்.பி.யை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் பின்னர் அவரையும் சமையல்காரரையும் விட்டுவிட்டனர். எஸ்.பி.யின் நண்பரை மட்டுமே பிணைக்கைதியாக பிடித்துச் சென்றுள்ளனர். எஸ்.பி.யிடம் இருந்து பறித்த செல்போன் மூலம் தங்களது தலைமையிடம் தீவிரவாதிகள் தொடர்ந்து பேசியுள்ளனர்.
இதனிடையே வாடகை காரை இயக்கிய டிரைவரை போலீஸார் கண்டுபிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் வாடகைக்கு கார் கேட்டதாக டிரைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த தொலைபேசி அழைப்பு பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது. அதை கவனிக்காதது ஏன் என்று டிரைவரிடம் போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் எஸ்.பி.யிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராணுவ வீரர்களுக்கு மோடி பாராட்டு
மைசூரு
பதான்கோட் விமானப் படை தள தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மனிதகுல எதிரிகள் பதான்கோட் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் அதனை நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
நமது வீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன். தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நமது எதிரிகளின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் திறன் பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியபோது, பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடி தவறான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார், அதன்விளைவாகவே பதான்கோட் விமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.