

தெலங்கானா மாநிலம் உதய மானதற்கு நேர்த்திக் கடன் செலுத் தும் வகையில், திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் 30-ம் தேதி ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை காணிக்கையாக வழங்குகிறார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இப்போதைய தெலங்கானா மாநில கலாச்சாரத் துறை அரசு ஆலோ சகருமான கே.வி. ரமணாச்சாரி ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தனி தெலங்கானா மாநிலம் உதயமானதும் ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் உள்ள சில முக்கிய கோயில்களுக்கு தங்க நகைகளை காணிக்கையாக வழங் கப்படும் என வேண்டிக்கொண்டார்.
அதன்படி திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடை யில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலை யானுக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.5.5 கோடியாகும்.
இதற்காக தெலங்கானா அரசு கருவூலத்தில் இருந்து ஏற்கெனவே பணத்தைப் பெற்று, தங்க நகைகள் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த நகைகள் இப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வரும் 29-ம் தேதி வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரத்தின் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு தெலங்கானா முதல்வருக்கு ஆந்திர அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் கலந்துகொள்ளும் சந்திரசேகர ராவ், மறுநாள் திருப்பதிக்குச் சென்று ஏழுமலை யானைத் தரிசனம் செய்ய உள் ளார். அப்போது தெலங்கானா மக்கள் சார்பில் ரூ.5.5 கோடி தங்க நகைகளை வழங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த பணத்தில் அல்லது கட்சிப் பணத்தில் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வேண்டும். மக்களின் வரிப் பணத்தை குறிப்பிட்ட எந்த மதத்துக்கும் செலவு செய்ய கூடாது” என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ஏற்கெனவே, வாரங்கலில் உள்ள பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடமும் வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசையும், விஜயவாடா கனக துர்கையம்மனுக்கு தங்க மூக்குத்தியும் சந்திரசேகர ராவ் காணிக்கையாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.