Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - டெசோ வேண்டுகோள்

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை டெசோ அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்று கருணாநிதி தெளிவாக எடுத்துரைத்த பிறகும், தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு இலங்கைக்கு சென்றது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றது.

இங்கிலாந்து பிரதமர் கருத்து

ஈழத்தமிழர் பிரச்சினையில் நெருக்கமான தொடர்பு இல்லாத இங்கிலாந்து பிரதமரே, இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது, தமிழ்ச் சமுதாயத்தை அறவே புறக்கணித்து, மனம் வருந்தச் செய்யும் நடவடிக்கை மட்டுமில்லாமல், தமிழினத்தை அழிக்க முனையும் ராஜபக்சேவுக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் நடவடிக்கையும் ஆகும்.

உலகத் தமிழர்களின் உணர்வுகளையும், பல்வேறு நாடுகளின் தலைவர்களின் கருத்துகளையும் மத்திய அரசு புரிந்து கொண்டு, இனியாவது இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதிமுக அரசுக்கு கண்டனம்

இடைக்கால நிவாரணமாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் கிடைத்திடும் வகையில், 13-வது சட்டத்திருத்தம் அமைய வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்திய அரசு அளித்த தொகை, அவர்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர் துயரத்தின் நினைவுச்சின்னமான முள்ளிவாய்க்கால் முற்றத்தை சிதைத்த அதிமுக அரசின் தமிழின விரோத நடவடிக்கையை டெசோ வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போராட்டம் இல்லை

மத்திய அரசுக்கு எதிராக டெசோ சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்மானங்களுடன் கூட்டம் முடிந்தது.

கூட்டம் முடிந்ததும் கருணாநிதியிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அவர் அதை தவிர்த்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சிறப்பு அழைப்பாளர்களான மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ரவிக்குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகம்மது ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்., ஆதரவு தேவை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘‘நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு காங்கிரசின் ஆதரவு அவசியம் தேவை. எனவே, தமிழக எம்.பி.க்கள் ஓரணியில் திரண்டு காங்கிரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x