Published : 03 Oct 2014 02:32 PM
Last Updated : 03 Oct 2014 02:32 PM

இந்தியர்கள் திறமையை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்

"இந்தியர்கள் அபாரமான திறமைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை தேச வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆல் இந்தியா ரேடியோ பன்பலையில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். 15 நிமிடங்கள் அவரது உரை நீடித்தது. அப்போது அவர் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடி பேசியதாவது: "செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை மிகக் குறைந்த செலவில் நமது விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர். நமது நாட்டில் திறமைகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், நமக்குள் மறைந்திருக்கும் திறமைகளை நாம் மறந்துவிட்டோம். அதுதான் நமது பிரச்சினை.

என் சகோதர, சகோதரிகளே இந்த நிலை நீடிக்கக்கூடாது. நமது திறமைகளை நாம் அங்கீரிக்க வேண்டும். சுவாமி விவேகானந்தா ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் சிங்கத்தால் வளர்க்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டி தனது பலத்தை உணர்வதை அழகாக எடுத்துரைத்திருப்பார். நம் திறமைகளை உணர்ந்து, சுய மரியாதையுடன் வாழ கற்றுக்கொண்டால் நாம் வெற்றி பெறலாம் என்றார்.

காதி தயாரிப்பை வாங்க வேண்டும் என்பதை மக்கள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால், ஏழைகளுக்கு நன்மை கிடைக்கும்" என்றார்.

நாட்டு மக்களுடன் இனி அவ்வப்போது வானொலியில் பேச இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியளவில் உரை நிகழ்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x