

மேற்குவங்கத்தில் கால்நடைகள் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
மேற்குவங்கத்தின் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில் சோனர்பூர் கிராம பஞ்சாயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்திருக்கிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "கால்நடைகளைத் திருடும் நோக்கத்துடன் கிராமத்துக்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலை உள்ளூர்வாசிகள் சுற்றிவளைத்து தாக்கியபோது மூவர் பலியாகினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை உத்தர் தினஜ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் பரத் ரத்தோடும் உறுதி செய்துள்ளார்.
"கால்நடைகளைத் திருடவந்த கும்பலை ஊர் மக்கள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் மூவர் மட்டும் சிக்கிக் கொண்டனர். மற்றவர்கள் தப்பித்துவிட்டனர். சிக்கிய மூவரையும் ஊர் மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
கொல்லப்பட்ட மூவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. முகமது நசிருல் ஹக் (30), முகமது சமிருதீன் (32), முகமது நசீர் (33) ஆகியோர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இவர்கள் மூவர் மீதும் ஏற்கெனவே காவல்துறையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.