

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் பினாமி சொத்துகள் தொடர்பான விசாரணையை வருமான வரித் துறை விரிவுபடுத்தி வரும் நிலை யில், அவரது மருமகனும், எம்.பி. மிசா பாரதியின் கணவருமான சைலேஷ் குமாரிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
லாலு குடும்பத்தினர் பினாமி பெயர்களில் சொத்துகள் குவித் திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவர்களுக்கு சொந்த மான இடங்களில் வருவான வரித் துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
பிஹார் தலைநகர் பாட்னா மற்றும் டெல்லியில் லாலு குடும்பத் தினருக்கு சொந்தமான ரூ.175 கோடி மதிப்பிலான சொத்துகள் அண்மையில் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக லாலுவின் மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார், லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வரு மான தேஜஸ்வி யாதவ் உள்ளிட் டோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதையொட்டி டெல்லி வருமான வரித் துறை அலுவலகத் தில் நேற்று முன்தினம் ஆஜரான மிசா பாரதியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரது கணவர் சைலேஷ் குமாரிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
மிசா பாரதியின் ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வால், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில் லாலு குடும்பம் உள்ளிட்ட அரசியல் குடும்பங்கள் மற்றும் தொழிலதிபர் களின் பினாமி சொத்துகள் மற்றும் போலி நிறுவனங்கள் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், வனத்துறை அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.