Last Updated : 04 Aug, 2016 07:29 AM

 

Published : 04 Aug 2016 07:29 AM
Last Updated : 04 Aug 2016 07:29 AM

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது: வாக்கெடுப்பை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்கள வையில் நேற்று நிறைவேறியது. எனினும், இந்த மசோதாவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த துடன் வாக்கெடுப்பை புறக் கணித்தது.

மத்திய, மாநில அரசுகள் தனித் தனியாக விற்பனை வரியை வசூலிப் பதற்கு பதிலாக நாடு முழுவதும் ஒருமுனை வரி முறையை அமல் படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத் தில் திருத்தம் (122-வது) செய்ய வேண்டி, காங்கிரஸ் ஆட்சியி லேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக அதை நிறைவேற்ற முடிய வில்லை.

இதனிடையே, மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு மே மாதம் மக்கள வையில் ஜிஎஸ்டி மசோதா நிறை வேற்றப்பட்டது. எனினும் மாநிலங் களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவும் மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி களின் கோரிக்கையை ஏற்று இந்த மசோதாவில் 4 முக்கிய திருத் தங்களை செய்ய அரசு ஒப்புக் கொண்டது. இதற்கு மத்திய அமைச் சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை மாநிலங்கள வையில் நேற்று உணவு இடை வேளைக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அப்போது விவாதத்தை தொடங்கிவைத்து அவர் பேசியாவது:

பல்வேறு அரசியல் கட்சி களிடையே ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு, ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவ ருக்கும் நன்றி. இது சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகவும் முக்கியமான வரி சீர்திருத்த நடவடிக்கை ஆகும். ஒருமுனை வரி அமலுக்கு வருவதால் வரிக்கு மேல் வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

இந்த மசோதா சட்டமாவதன் மூலம், தேசிய அளவில் சிறந்த பொருளாதார நிர்வாக நடை முறையை அமல்படுத்த முடியும். குறிப்பாக வரி ஏய்ப்பு செய்வதைக் கண்காணிக்க முடியும். பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பதாகவும் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசும்போது, “ஜிஎஸ்டி மசோதாவை காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை. சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். அதை அரசு ஏற்றுக்கொண்டதால் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். அதேநேரம், ஜிஎஸ்டியின் கீழ் 18 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு நிதியமைச்சர் உத்தரவாதம் தர வேண்டும். மேலும் இதை பண மசோதாவாக அல்லாமல் நிதி மசோதாவா நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதிமுக எதிர்ப்பு

அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் பேசும்போது, “அரசிய லமைப்பு சட்டத் திருத்த (ஜிஎஸ்டி) மசோதா செல்லாது. இது மாநிலங் களின் நிதி சுதந்திரத்தையும் கூட்டாட்சி தத்துவத்தையும் மீறுவதாக உள்ளது. இது உற்பத்தி மாநிலமான தமிழகத்துக்கு நிரந்தர வருவாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே இந்த மசோதாவை கடுமை யாக எதிர்க்கிறோம்” என்றார்.

திமுக ஆதரவு

திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, “ஜிஎஸ்டியால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, நிதி சுமையை அதிகரிப்பதாக இருக்கக் கூடாது. புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திர புதானியா பேசும்போது, “ஜிஎஸ்டி மசோதா காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டபோது, குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போது அவர் தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற முன்வந்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மேலும் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி), டெரிக் ஓ பிரயன் (திரிணமூல் காங்கிரஸ்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஏ.யு. சிங் தியோ (பிஜு ஜனதா தளம்), பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), அனில் தேசாய் (சிவசேனா) உள்ளிட்டோர் பேசினர்.

ஜிஎஸ்டி மசோதாவை பண மசோதாவாக அல்லாமல் நிதி மசோதாவா நிறைவேற்ற வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்று பேசிய பெரும்பாலான உறுப்பி னர்கள் கோரிக்கை வைத் தனர்.

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் களின் பல்வேறு கேள்விகளுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்தார். சுமார் 7 மணி நேர விவாதத்துக்குப் பிறகு, மசோதா மீது வாக்கெடுப்பு நடக்க இருந்தது. அப்போது, தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நடந்த வாக்கெடுப்பில் அமோக ஆதரவுடன் இந்த மசோதா நிறை வேறியதாக அறிவிக் கப்பட்டது.

இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள தால் மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.

அதைத் தொடர்ந்து, குறைந்த பட்சம் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப்பேரவைகளில் இந்த மசோ தாவை நிறைவேற்ற வேண்டும். இது சவாலான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த நிதியாண்டு முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் பாராட்டு

மாநிலங்களவையில் நேற்று ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக விவாதம் நடந்தபோது, ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்துக் கொண்டன. இரு கட்சிகளும் எப்போதும் காரசாரமாக விவாதம் செய்து வந்த நிலையில் இது ஒரு அரிய நிகழ்வாக இருந்தது.

ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட ஒத்துழைப்பு கொடுத்த எதிர்க்கட்சித் தலைவ்ர குலாம் நபி ஆசாத்துக்கு (காங்கிரஸ்) நன்றி” என்றார். இதுபோல, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் (காங்கிரஸ்) ஜேட்லிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x