Published : 27 Feb 2017 09:40 AM
Last Updated : 27 Feb 2017 09:40 AM

மனித தவறால் பண்டிப்பூர் சரணாலயத்தில் தீ: வனத்துறை வட்டாரங்கள் தகவல்

கர்நாடக மாநிலம், பண்டிப்பூர் சரணாலய காட்டுத் தீ, மனித தவறால் ஏற்பட்ட இயற்கை பேரிடர் என்று மூத்த வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட பகுதியில் 87,400 ஹெக்டேர் பரப்பில் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 17-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டு சரணாலயம் முழுவதும் பரவியது. இதில் சுமார் 1000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிந்துவிட்டன.

குரங்குகள் பலி

ஒரு வாரத்துக்கும் மேலாக பற்றி யெரிந்த காட்டுத் தீ, கேரளாவின் வயநாடு சரணாலயத்துக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனினும் கர்நாடக, கேரள வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்தினர்.

பண்டிப்பூர் சரணாலயத்தில் வசித்த புலிகள், யானைகள் உள் ளிட்ட பெரும்பாலான உயிரினங்கள் தப்பிவிட்டன. எனினும் லங்குர் இனத்தைச் சேர்ந்த 14 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்துவிட்டன.

இதுதொடர்பாக வனத்துறை மூத்த அதிகாரிகள் சிலர் கூறியபோது, பண்டிப்பூர் சரணாலய காட்டுத் தீ மனிதனால் ஏற்பட்ட இயற்கை பேரிடர். அடர்ந்த வனப்பகுதியில் சிலர் தீ மூட்டியுள்ளனர். அந்தத் தீ காற்றின் வேகத்தால் பரவி, பயங்கர காட்டுத் தீயாக மாறியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் வன வளம் அழிந்துள்ளது என்று தெரிவித்தனர்.

பழங்குடிகளுக்கு வேலை

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறியபோது, பண்டிப்பூர் வனப்பகுதியில் வசிக்கும் பழங் குடியின மக்கள் வேலைவாய்ப் பின்றிப் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு வனத்துறை நிர்வாகம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்களோடு இணைந்து வன வளத்தைப் பாதுகாக்க வேண்டும். வனத்துறை தனது கடமையில் இருந்து தவறியதால் மிகப்பெரிய காட்டுத் தீ நேரிட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

வனத்துறை நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்று இந்திய காடுகளில் இயற்கையாக காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பில்லை. சிலரின் தவறுகளால் இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன.

கோடைகாலம் தொடங்குவதால் வறண்ட சருகுகளால் தீ பரவுவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன. எனவே காட்டுத் தீயை தடுக்கும் வகையில் ‘பயர் லைன்’ என்று அழைக்கப்படும் பசுமையான புற்களை ஆங்காங்கே வளர்க்க வேண்டும். இதன்மூலம் தீ பரவுவதைத் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்டுத் தீ குறித்து கர்நாடக வனத்துறை உயர்நிலை விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x