

ராமரை விமர்சித்த வழக்கில் கைதான பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை மைசூரு பல்கலைக் கழகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக மகேஷ் சந்திர குரு பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் ‘ராமா யணத்தின் முக்கிய கதாபாத்திர மான ராமன் மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டுள்ளார். கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையை குற்றவாளிபோல நடத்தி னார். ஆனால் ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன''என பேசி னார். இதற்கு சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
கர்நாடக சர்வோதய சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத் துவா அமைப்பினர் ஜெயலக்ஷ்மி புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 295-ஏ பிரிவின் (வன்முறையை தூண்டும் பேச்சு) கீழ் மகேஷ் சந்திர குரு மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதே போல 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பேராசிரியர் கே.எஸ்.பகவானுடன் இணைந்து பகவத் கீதையை எரிக்க முயற்சித்த விவகாரத்திலும் மகேஷ் சந்திர குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்விரு வழக்குகளையும் விசாரித்த மைசூரு நீதிமன்றம், வரும் ஜூலை 5-ம் தேதி வரை மகேஷ் சந்திர குருவை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தர விட்டது. அதன்படி போலீஸார் அவரை கைது செய்து நேற்று முன் தினம் மைசூரு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மைசூரு பல் கலைக் கழக பதிவாளர் பசவராஜ் கூறுகையில், ‘‘அரசு ஊழியர் குற்ற வழக்கில் கைதானால் 48 மணி நேரத்துக்குள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி பேராசிரியர் மகேஷ் சந்திர குரு பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கில் பிணை கிடைத்து வெளியே வந்த வுடன், இடைநீக்க ஆணை ரத்து செய்யப்படும்’’ என்றார்.
பேராசிரியர் மகேஷ் சந்திர குரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டுள் ளனர். இந்நிலையில் மைசூருவில்
பேராசிரியர்கள் கே.எஸ். பகவான், அரவிந்த் மாளகத்தி ஆகியோர் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் மைசூரு பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்களும், மகிஷாசுர அமைப்பினரும் அதிகளவில் கலந்துக்கொண்டனர். இதே போல பெங்களூருவில் ரவீந்திர கலாக்ஷேத்திரா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்று, பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை விடுவிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
யார் இந்த மகேஷ் சந்திர குரு?
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு தான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரு பல்கலைக் கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதியிருக்கிறார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித் துள்ளார். கர்நாடகா பணியாளர் தேர்வாணையத்திலும் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திலும் யூஜிசி குழுக்களிலும் உறுப்பின ராக உள்ளார்.
இவர் மகிஷாசுர இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மைசூருவை ஆண்ட மகாதேவா என்ற ஆட்சியாளர் அசோகரின் புத்தமதத்தைப் பின்பற்றினார். அவரது பெயராலே மைசூர் என பெயர் பெற்றது என கூறினார்.