

ஆளுநர்களை வைத்து மாநிலங்களின் மீதான தனது ஆதிக்கத்தை பாஜக நிறுவ முயற்சி செய்கிறது என்று குற்றஞ்சாட்டிய கேரள முதல்வர் பினரயி விஜயன், அர்விந்த் கேஜ்ரிவாலை டெல்லியின் முதல்வர் என்ற அளவில் கூட பாஜக மதிப்பதில்லை என்று சாடினார்.
திருவனந்தபுரத்தில் மத்திய-மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
பாஜக ஆளுநர்களைத் தங்கள் கைப்பாவையாகப் பயன்படுத்தி மாநில அரசு விவகாரங்களை தங்கள் கையில் வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. கோவா மற்றும் மணிப்பூர் இதற்கு சிறந்த உதாரணங்கள்.
இந்த மாநிலத்தின் ஆளுநர்கள் அதிக இடங்களை வென்ற காங்கிரஸை அழைக்கக் கூட இல்லை. மாறாக பாஜகவுக்கு நேரடியாக ஆட்சியமைக்க அனுமதி அளித்தனர்.
இத்தகைய போக்கு அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிரானது என்பதோடு ஜனநாயகமற்ற செயலாகும். பாஜக ஆட்சியில் மத்திய-மாநில உறவுகள் மோசமடைந்துள்ளது. அதுவும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக-வின் இத்தகைய ஆதிக்கச் செயல்பாட்டினால் பதற்றம் கூட விளைந்து வருகிறது.
டெல்லியில் கேஜ்ரிவாலை ஒரு முதல்வராக பாஜக மதிப்பதேயில்லை. சில மத்திய ஆட்சியின் தலைவர்கள் கேஜ்ரிவாலுக்கு ஆலோசகர் என்ற பங்கு மட்டுமே இருப்பதாக வெளிப்படையாக கூறி வருகின்றனர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை இவ்வாறு அழைப்பது ஜனநாயகமா?
பேச்சில் அதிகாரப்பரவல் என்று கூறிக்கொண்டே ஆர்.எஸ்.எஸ். கொள்கையான கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவித்து அதிகாரத்தை ஒற்றைமையமாக்க முயற்சி செய்கின்றனர். திட்டக் கமிஷனை நீக்கியது இத்தகைய ஜனநாயகமற்ற செயலுக்கு ஒரு உதாரணம். அதே போல் மாநிலங்களுக்கு வர வேண்டிய பங்கு விகிதத்தை 80:20 என்பதிலிருந்து 60-40 என்று குறைத்தது.
இவ்வாறு பேசினார் விஜயன்.