பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு மேற்கத்திய உடையே காரணம்: கர்நாடக உள்துறை அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு மேற்கத்திய உடையே காரணம்: கர்நாடக உள்துறை அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
Updated on
1 min read

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு அவர்கள் அணியும் மேற்கத்திய உடையே காரணம் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பெங்களூருவின் எம்.ஜி.சாலை மற்றும் பிரிகேட் சாலைகளில், சில இளைஞர் குழுக்களால் பெண்களின் மீதான ஆபாசத் தாக்குதல்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறும்போது, "பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு அவர்கள் அணியும் மேற்கத்திய உடையே காரணம்" என்றார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில், ''இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மேற்கத்தியவர்களாகவே ஆகிவிட்டார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், ஆடை அணிவதிலும் அவர்களையே பின்பற்றுகின்றனர். இதனால் சில தொந்தரவுகள் ஏற்பட்டு, பெண்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்'' என்று கூறியிருந்தார்.

எம்.ஜி. சாலை வன்முறை

கர்நாடகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிய வேளையில், ஏராளமான காவல்துறையினரின் முன்னிலையில் இளைஞர்கள் சிலர் இளம்பெண்களைத் தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு திட்டியதாகவும், ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

23 வயதான ருச்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதுகுறித்து கூறும்போது, ''அந்த அனுபவத்தை நினைத்தாலே திகிலாக இருக்கிறது. என்னுடைய ஐந்து நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் எம்.ஜி. சாலைக்குச் சென்றேன். அங்கிருந்து வீடு திரும்புவதற்காக டாக்ஸியை முன்பதிவு செய்துகொண்டிருந்தோம். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது விழ முயற்சித்தனர். சிலர் தவறான வார்த்தைகளை உபயோகித்தனர். வேறு சிலர் என் தோழிகளைத் தொட முயன்றனர்'' என்றார்.

கர்நாடக மாநில பெண்கள் ஆணையம் இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற அறிக்கையைக் கோரியுள்ளது.

புகார் வரவில்லை

இதுகுறித்துப் பேசிய காவல் ஆணையர் பிரவீன் சூத், ''இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எங்களுக்குப் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இரண்டு சாலைகளிலும் இருந்த 15 கேமராக்களின் சிசிடிவி காட்சிகளைக் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்'' என்றார்.

புத்தாண்டில் கூடிய மிகப்பெரிய மக்கள் வெள்ளத்தில் ஒவ்வொரு சம்பவத்தையும் காவல்துறையால் கண்காணிக்க இயலாது. அதே நேரத்தில் காவல்துறை தாமாகவே முன்வந்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.விமலா கூறும்போது, ''பெண்களைக் குறை கூறுவதை விடுத்து, அதிகாரிகள் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உணர வேண்டும். இனிமேலாவது பெண்களுக்கான இடத்தையும் இந்த சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கட்டும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in