

ரயில் பவன் அருகே, முதல்வர் கேஜ்ரிவால் தர்ணா செய்யும் இடத்திற்கு செல்ல போடப்பட்டுள்ள தடுப்பை, ஆதரவாளர்கள் உடைத்ததால், போலீஸார் தடியடி நடத்தினர்.
தர்ணா செய்யும் இடத்திற்குள் நுழைய போலீஸ் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள், போடப்பட்டிருந்த தடுப்பை உடைத்து, தர்ணா பகுதிக்குள் நுழைந்தனர்.
சிலர் கல் எறிந்ததாக தகவல்கள் வெளியானாலும் போலீஸ் தரப்பு அதை மறுத்துள்ளது.
முதலில் 200-300 ஆதரவாளர்கள் நுழைவதைப் பார்த்து, மற்றவர்களும் நுழைய முற்பட்டதால், சூழ்நிலை மேலும் குழப்பமடைந்தது.
இதில் காயமடைந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் ஆம்புலன்ஸிற்கு மாற்றினர். போலீஸ், கட்சித் தொண்டர்கள் பலரை மூர்க்கமாகத் தாக்கியதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் சாடியுள்ளார். பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"நாங்கள் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முயற்சி செய்கிறோம். எங்கள் கட்சியின் தொண்டர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்" என சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆதரவு வாபஸ்?
கேஜ்ரிவாலின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது என்றும், ஆம் ஆத்மிக்கான ஆதரவு குறித்த முடிவு, உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பத் வரை போராட்டக்காரர்கள் திரள்வார்கள் என கேஜ்ரிவால் மிரட்டியதை, மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி கடுமையாக சாடியுள்ளார்.
"குடியரசு தின விழாவினை ஒழுங்காக நடத்துவது மத்திய அரசின் கையில் மட்டுமா உள்ளது? டெல்லி முதல்வருக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் அந்த பொறுப்பு இல்லையா. இவர்களின் இந்த நடத்தை அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்" என்று அவர் கூறியுள்ளார்.
இன்னும் பல காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கேஜ்ரிவாலின் தர்ணாவைக் கண்டித்துள்ளனர்.
டெல்லி பாஜக நிர்வாகி விஜய் கோயல் "இதற்கு முன்னர் அவர்கள் டெல்லி போலீஸை எதிர்த்தார்களா? இதற்கு காங்கிரஸும் உடந்தையே. இல்லையேல் ஏன் காங்கிரஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் பேசுகையில்: "முந்தைய ஷீலா தீக்ஷித் அரசின் முறைகேடுகளை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. குற்றம்சாட்டப்பட்டுள்ள தனது அமைச்சர்களின் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மக்கள் கவனத்திலிருந்து இதையெல்லாம் திசை திருப்பும் முயற்சி இது" என்று கூறினார்.