Published : 19 Feb 2014 12:11 PM
Last Updated : 19 Feb 2014 12:11 PM

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா: காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அமைச்சரவை முழுவதுமாக கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என கிரண் குமார் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. இதையடுத்து, புதன்கிழமை ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் நரசிம்மனை நேரில் சந்தித்த முதல்வர் கிரண் குமார் ரெட்டி, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கிரண்குமார் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அரசியல் சுயலாபத்திற்காக ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். இந்தப் பிரிவினைக்கு காரணமான காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. பிரிவினையால் விவசாயம், மின்சாரம், அரசு வேலைவாய்ப்பு, குடிநீர், மருத்துவம், கல்வி ஆகியவற்றில் சீமாந்திரா பகுதி மக்களுக்கு இழப்பு ஏற்படும்.

ஆந்திர மறுசீரமைப்பு மசோதாவை தயாரித்த முறையே சரியானது அல்ல. பல தவறுகளைக் கொண்ட இந்த மசோதாவை ஆந்திர சட்டசபை நிராகரித்து விட்டது. பின்னர் அதே மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு நன்றி

அரசியல் நாடகங்களுக்கு தெலுங்கு மக்கள் பலியாகி விட்டனர். என்னுடைய வளர்ச்சிக்கும் முதல்வர் பதவி வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மாநில பிரிவினையைக் கண்டித்து என்னுடைய முதல்வர், எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்கிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்.

எனது எதிர்காலமே முக்கியம் என்றால், இதே கட்சியில் தொடர்ந்து பணியாற்றி இருப்பேன். ஆனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகுகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x