

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
அதன் பிறகு முறைப்படி ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபத்நவீஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, "சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களின் கூட்டம் திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதில் ஆட்சி அமைப்பது சில குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும்.
பாஜக உறுப்பினர்களின் ஆதரவின்பேரில் மாநிலத்தின் முதல்வர் பதவிகான நபரும் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
தீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களில் எதிர்ப்பார்த்த அளவில் எந்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எனவே, சுமுக முடிவுக்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்றார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிறு அன்று வழங்க இருக்கும் தேநீர் விருந்தில் சிவசேனா உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் இரு கட்சிகளின் நிலைப்பாடும் தெரிய வரும் என்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
மேலும், இந்தச் சந்திப்புக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்தால், சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை வழங்க நிபந்தனை வைத்ததாக வெளியாகும் தகவல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அனில் தேசாய் , மஹாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதே சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் என தெரிவித்தார்.
பாஜக-சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் திங்கட்கிழமை அன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் இந்த இரு கட்சிகளும் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
நடந்த முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 123 இடங்களை பெற்றது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை பெறாததால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக உள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் 63 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனாவின் ஆதரவை பாஜக மீண்டும் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் தொகுதி உடன்பாடு பிரச்சினையில் பாஜக - சிவசேனா ஆகிய கட்சிகள் தங்களது 25 வருட கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர், இருப்பினும் தற்போது ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்வைத்து சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மறுபுறம் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தும், பாஜக தலைமை வட்டாரம் சிவசேனாவின் ஆதரவை மட்டுமே எதிர்நோக்கி உள்ளது.
இதனிடையே, பாஜக மகாராஷ்ட்ராவில் உள்ள மற்ற சில சிறிய மற்றும் சுயேட்ச்சை கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கும் முயற்சித்து வருகிறது.