தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு: பாஜக, மஜத, கன்னட அமைப்புகள் பங்கேற்பு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு: பாஜக, மஜத, கன்னட அமைப்புகள் பங்கேற்பு
Updated on
2 min read

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது. இதில் பாஜக, மஜத உட்பட ஆயிரத்துக்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற் கின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் செவ்வாய் நள்ளிரவு காவிரியில் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து 4-வது நாளாக நேற்றும் மண்டியா, மைசூரு ஆகிய‌ மாவட்டங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய அமைப்பினரும் போராட்ட‌த்தில் ஈடுபட்டனர். பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள் சாலையிலே சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

மண்டியாவை அடுத்துள்ள ஸ்ரீரங்கப்பட்டினாவில் நடந்த போராட்டத்தில் கன்னட நடிகர்கள் தர்ஷன், பிரேம், சச்சின் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை முற்றுகை போராட்டத்தில் மஜத எம்எல்ஏக்கள் ஜி.டி.தேவகவுடா, புட்டராஜூ உட்பட 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

தமிழக வாகனங்கள் தாக்குதல்

மண்டியா அருகேயுள்ள மத்தூரில் தமிழக பதிவெண் கொண்ட‌ 6 லாரிகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கினர். மண்டியாவில் போராட்டம் நடத்திய 250 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா- தமிழகம் இடையே யான பேருந்து போக்குவரத்து 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் ஓசூர், சத்தியமங்கலத்தில் நிறுத்தப் பட்டன. தமிழகத்துக்கு செல்லும் கர்நாடக அரசு பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளா கினர்.

கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ந‌டை பெறும் முழு அடைப்பில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான க‌ன்னட சலுவளி கட்சி, கன்னட ரக் ஷன வேதிகே உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரும் 300-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினரும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினரும் கன்னட திரைப்பட வர்த்தக சபையினரும் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக‌ கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் ‘தி இந்து’விடம் கூறியபோது, முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

தமிழ் சேனல்களுக்கு தடை

கர்நாடகாவில் அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து த‌மிழ் தொலைக்காட்சி சேனல்களும் நிறுத்தப்படுவதாக கேபிள் ஆபரேட்டர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக பதிவெண் கொண்ட வாக னங்கள் கர்நாடகாவில் நுழையாமல் இருப்பது நல்லது என லாரி ஓட்டுநர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்பேட்டை, ஹாசன், ராம்நகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தரா மையா கூறியபோது, ‘‘அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது. பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கக்கூடாது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறியபோது, ‘‘மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித் துள்ளார்.

கண்காணிப்பு குழுவுக்கு தமிழக அரசு கடிதம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு காவிரி கண்காணிப்பு குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு செப்டம்பர்30-ம் தேதிக்குள் 134 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா சுமார் 13 டிஎம்சி நீரை திறந்துவிடும். மேட்டூர் அணையில் தற்போது இருப்பில் உள்ள நீரும் கர்நாடகம் திறந்து விட உள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள‌ சம்பா சாகுபடிக்கு 60 டிஎம்சி நீர் உடனடியாக தேவைப்படுகிறது. எனவே உடனடியாக காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு தேவையான 60 டிஎம்சி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் வரும் 12-ம் தேதி காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in