

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்திய பிரிட்டனைப் போலவே டெல்லி முழு மாநில அந்தஸ்தை பெற பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே டெல்லி முழுமாநிலத்துவ மசோதா ஆலோசனைகளுக்காக பொது அரங்கில் உள்ளது. இந்நிலையில் டெல்லியை முழு மாநிலமாக அறிவிப்பதற்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில், “பிரிட்டன் பொதுவாக்கெடுப்பையடுத்து டெல்லிக்கும் பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால் துணை நிலை ஆளுநரின் அதிகார எல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களின் எல்லைகளையும் தீர்மானிப்பதாக உள்ளதாக ஏற்கெனவே ஆம் ஆத்மி கூறிவந்துள்ளது, டெல்லி முழு மாநில அந்தஸ்து இல்லததால் போலீஸ் துறை, நில விவகாரம், அதிகாரிகள் இடமாற்றம் பணி நியமனம் என்று ஒவ்வொன்றிலும் மத்திய அரசின் தலையீடு இருந்து வருகிறது. இதனையடுத்து முன்பே கூட அரவிந்த் கேஜ்ரிவால் மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கான சட்ட ஆலோசனையையும் கோரியிருந்தார்.
ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை ‘அபாயகரமானது’ என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கண்டித்துள்ளார்.
“அரசமைப்புச் சட்டம் எந்த ஒரு பொதுவாக்கெடுப்பையும் அனுமதிப்பதில்லை. கேஜ்ரிவால் அபாயகரமான ஒரு பாதையில் செல்கிறார். பிற மாநிலங்களும் இத்தகைய பொதுவாக்கெடுப்பைக் கோரும் நிலைமைகளை அவர் உருவாக்கப்பார்க்கிறார். காஷ்மீர் பிரச்சினை உள்ள போது, கேஜ்ரிவால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தைக் கிளறுகிறார். இது தேச-விரோதமானது” என்றார்.