

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி செலுத்தும் பாணி, ஆரம்ப காலத்தில் பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி நடத்தியதைப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில்: "ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கு எதிராக போராடுவது, ஏழைக் குழந்தைகளுக்கு முடி திருத்தம், குளிப்பாட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவது, ஆரம்ப காலத்தில் பீகாரில் நடந்த லாலு ராஜ்ஜியத்தை நினைவுபடுத்துகிறது" என பதிவு செய்திருக்கிறார்.
'லாலு ராஜ்ஜியம்' என்ற வார்த்தையை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு எதிரானவர்களும், வளர்ச்சியின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிறைந்த ஆட்சியை குறித்து விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்களும் பயன்படுத்துகின்றனர்.
நேற்று, ஆம் ஆத்மி கட்சியைப் பாராட்டிப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை எதிர்த்து கட்சி வட்டாரத்தில் குரல் கிளம்பியுள்ளது.