

அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது தேச விரோத மற்றும் அவதூறு புகார்களை எழுப்ப முடியாது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரான என்.ஜி.ஓ. மீதான வழக்கில் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறும்போது, “அரசை விமர்சிக்கும் பொருட்டு யாராவது ஒருவர் கருத்து தெரிவித்தாலோ அல்லது அறிக்கை மேற்கொண்டாலோ அவதூறு மற்றும் தேச விரோத வழக்குகளை ஒருவர் மீது தொடர முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ஏ-யின் கீழ் வழக்கு பதிவு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் சுட்டிக்காட்டி அறிவுறுத்தியதை நினைவில் கொள்வது நலம்” என்று கூறியது.
பிரசாந்த் பூஷன் தனது வாதத்தில், தேச விரோத வழக்கு என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆனால் இதனை அரசுக்கு எதிரான விமர்சனத்திற்கெதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று கூறி கூடங்குளம் போராட்டம் மற்றும் கார்ட்டூனிஸ்ட் அஜீம் திரிவேதி ஆகிய வழக்குகளை உதாரணமாக குறிப்பிட்டார்.
இதற்கு நீதிபதிகள் பதில் கூறும்போது, “தேசவிரோதச் சட்டத்தை நாம் விளக்க வேண்டிய அவசியமில்லை. 1962-ல் நடைபெற்ற கேதார்நாத் சிங், பிஹார் அரசுக்கு இடையிலான வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவாக விளக்கியுள்ளது” என்றனர்.
காமன் காஸ் என்ற என்.ஜி.ஓ. இது தொடர்பாக மேற்கொண்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, “தேச விரோத சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்தால் அதனை குறிப்பிட்டு தனியாக ஒரு வழக்கு தொடருங்கள். குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டுவதும், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வதும் அந்தந்த வழக்கின் தன்மையைப் பொறுத்தது. இல்லையெனில் இது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விடும். எனவே பொதுமைப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளது.
பிரசாந்த் பூஷன் மேலும் வாதிடும் போது, கேதார் நாத் சிங் தீர்ப்புக்குப் பிறகே சட்டம் திருத்தப்படவில்லை. மேலும் அந்தத் தீர்ப்பை கான்ஸ்டபிள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவினை மட்டும் அறிந்து வைத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “கான்ஸ்டபிள்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. மேஜிஸ்ட்ரேட்தான் தேச விரோத சட்டம் என்ன கூறுகிறது, உச்ச நீதிமன்றம் இது பற்றி என்ன வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
என்.ஜி.ஓ. காமன்காஸ் மேற்கொண்ட மனுவில், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என்று அனைவர் மீதும் தேச விரோதச் சட்டம் பாய்கிறது, இது தவறான பிரயோகம், சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதம் செய்ததற்காக ஆம்னெஸ்டி அமைப்பு மீது தேச விரோத சட்டம் பாய்ந்துள்ளது. எனவே பயத்தை உருபாக்க பிரிவு 124-ஏ தவறாகப் பயன்படுத்துகிறது.
தேசிய குற்றப்பதிவேடுகள் கழக அறிக்கையை சுட்டிக்காட்டிய இந்த அமைப்பு, 2014-ம் ஆண்டில் மட்டும் 47 தேச விரோத வழக்குகள் போடப்பட்டுள்ளன. 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசு ஒரேயொரு வழக்கில் மட்டும்தான் வெற்றி கண்டுள்ளது.
எனவே இது குறித்து உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என்றும் எஃப்.ஐ.ஆர். நகலை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி காண்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது.
இதனையடுத்தே உச்ச நீதிமன்றம் இதில் ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது, அதனை சம்பந்தப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ளும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளும் மேஜிஸ்ட்ரேட்டுகளும் அறிந்திருத்தல் அவசியம் என்றும், தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி, தேச விரோத சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைச் சுட்டிக்காட்டி தனியாக வழக்கு பதிவு செய்யுங்கள் என்றும் கூறி மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.