

தெலங்கானா மசோதாவுக்கு எதிராக முதல்வர் கிரண்குமார் ரெட்டி கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானா தனி மாநில மசோதா குறித்து விவாதம் ஆந்திர சட்டமன்றத்தில் பலத்த அமளிக்கிடையே நடைபெற்று வந்தது. கடந்த 4 நாட்களாக தெலங்கானா, சீமாந்திரா பகுதி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் விவாதம் நடைபெறவில்லை.
இதற்கிடையே மேலும் 3 வாரம் அவகாசம் தர வேண்டும் என்று முதல்வர் கிரண் குமார் ரெட்டி, குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.
குடியரசுத் தலைவரிடமிருந்து எந்தவித தகவலும் வராத நிலையில், அவைத் தலைவர் நாதேள்ள மனோகர் தலைமையில் சட்டமன்றம் வியாழக்கிழமை கூடியது. அவைத் தலைவரின் இருக்கையை சீமாந்திரா, தெலங்கானா பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவை நடவடிக்கை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் பலத்த அமளிக்கிடையே முதல்வர் கிரண்குமார் ரெட்டி கொண்டு வந்த தெலங்கானா மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது அவைத் தலைவர் மனோகர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார்.
இறுதியில், அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மனோகர் அறிவித்தார். பின்னர், தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.