சிறையில் சசிகலாவுக்கு போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைப்பு

சிறையில் சசிகலாவுக்கு போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைப்பு
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக பரப்பன அக்ரஹாராவில் நூற்றுக்கும் மேற் பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறை வளாகத்துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே தடுப்புகள் போடப்பட்டு, பலத்த சோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜெய லலிதா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது தினமும் ஆயிரக் கணக்கானோர் சிறைக்கு வந்தனர். ஆனால் இப்போது சசிகலாவுக்கு அந்த அளவுக்கு கூட்டம் வரவில்லை. எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார் அனைவரும் நேற்று வேறு பணிகளுக்கு அனுப்பப் பட்டனர். பரப்பன அக்ரஹாராவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு மையாக குறைக்கப்பட்டதால் வேறு கைதிகளை பார்க்க வரும் உறவினர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறைக்கு வெளியே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை போலவே சசிகலாவுக்கு சிறைக்கு உள்ளேயும் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சயனைடு மல்லிகா பெல்காம் இண்டல்கா சிறைக்கு மாற்றப்பட் டுள்ள நிலையில், இத்தகைய நட வடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அதே வேளையில் மகளிர் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவலர்கள் சசிகலாவை கண்காணித்து வருவதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் வசதிகள் கோரினாரா?

சசிகலா தனது வயதை கருத்தில் கொண்டு சிறையில் டேபிள் ஃபேன், ஏசி, கூடுதல் மெத்தை, பெரிய குளியல் அறையுடன் கூடிய அறை உள்ளிட்ட கூடுதல் வசதிகளை வழங்க கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. இதனை பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலா தரப்பில் முதல் வகுப்பு சிறை வசதி, வீட்டு சாப்பாடு, வெளியில் இருந்து மருந்து கொண்டுவருவது போன்ற கோரிக்கைகள் தற்போது வரை பரிசீலனையில் உள்ளன என தெரிவித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in