Last Updated : 25 Nov, 2013 09:10 AM

 

Published : 25 Nov 2013 09:10 AM
Last Updated : 25 Nov 2013 09:10 AM

பெங்களூர் ஏடிஎம் தாக்குதல்: குற்றவாளியை நெருங்கியது போலீஸ்

பெங்களூர் ஏடிஎம் தாக்குதல் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளி, ஏற்கெனவே ஆந்திராவிலும் ஏடிஎம்மில் ஒரு பெண்ணைக் கொன்று பணம் பறித்தது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணியளவில் பெங்களூர் மாநகராட்சி சதுக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ஜோதி உதய் (58) என்ற வங்கி பெண் ஊழியர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம்மில் புகுந்த ஒருவர், ஷட்டரை மூடிவிட்டு ஜோதி உதயை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜோதி உதய், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தப்பியோடிய குற்றவாளியை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஜோதி உதய்யிடம் இருந்து கொள்ளையன் பறித்துச் சென்ற செல்போன், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூரைச் சேர்ந்த அபுசர் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.

அபுசரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதை ஒருவரிடம் இருந்து ரூ.500-க்கு வாங்கியதாக அபுசர் தெரிவித்தார். எனவே, ஏடிஎம் கொள்ளையன் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக ஆந்திர மாநில போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். அப்போதுதான் அனந்தப்பூர் மாவட்டத்தில் 2 வாரத்துக்கு முன்பு ஏடிஎம்மில் ஒரு பெண்ணைக் கொன்று பணம் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கடந்த நவம்பர் 10-ம் தேதி மாலை 5 மணியளவில் அனந்தப்பூர் மாவட்டம் தர்னாவரம் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் பரிமளம் என்பவர் பணம் எடுக்கச் சென்றார். அந்த நேரத்தில் அவரைத்தவிர யாரும் அங்கு இல்லை.

அப்போது ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த ஒருவர், ஷட்டரை மூடிவிட்டு பரிமளத்தை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்துச் சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த பரிமளத்தை கர்னூல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பரிமளம் தாக்கப்பட்ட சம்பவம், ஏடிஎம் மையத்தில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளையும் பெங்களூர் சம்பவத்தில் பதிவாகி இருந்த கேமரா காட்சிகளையும் கர்நாடக, ஆந்திர போலீசார் போட்டு ஒப்பிட்டுப் பார்த்தனர். இரு சம்பவத்திலும் ஈடுபட்ட நபரின் முகச் சாயல் ஒரே மாதிரியாக இருந்தது. எனவே, இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆந்திராவில் பரிமளத்திடம் இருந்து பறித்துச் சென்ற ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கர்னூல், இந்துப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஏடிஎம்களில் அந்த நபர் பணம் எடுத்துள்ளார்.

பெங்களூரில் ஜோதி உதய் தாக்கப்பட்ட ஏடிஎம்மில் கடந்த 18-ம் தேதி பணம் எடுத்துள்ளார். மறுநாள் அதே ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோதுதான் ஜோதி உதயை தாக்கி கொள்ளையடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. குற்றவாளியை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதுகுறித்து பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவ்ரத்கர் கூறும்போது, ஆந்திரா மற்றும் பெங்களூர் ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என தெரியவந்துள்ளது. குற்றவாளியை நெருங்கிவிட்டோம். ஓரிரு நாளில் அவரை பிடித்துவிடுவோம் என்றார்.

ஆனால், குற்றவாளி சிக்கிவிட்டதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் பெங்களூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x