

டெல்லியில் ஜிலேபி எடுத்து கொடுக்க தாமதமானதால் கடை விற்பனையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் ரயில்நிலையம் அருகில் உள்ள கோல் மார்கெட்டில் கடந்த செவ்வாய்கிழமை மாலை சுமார் 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஜிலேபி கடையில் பணியாற்றி வரும் சத்யேந்தர் சிங்கிடம் (29) சாப்பிடு வதற்கு ஜிலேபி வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் 30 வயது நீரஜ் குமார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், ஜிலேபியை எடுத்து தருவதில் தாமதமாகி உள்ளது. இதனால் கோபமடைந்த நீரஜ், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி, "ஏன் ஜிலேபி தர தாமதமாகிறது? சீக்கிரம் தரவில்லை எனில் சுட்டு விடுவேன்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
நீரஜின் கோபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சத்யேந்தர், ஜிலேபியை உடனடியாக எடுத்துக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீரஜ், தன்னிடம் இருந்த 9 எம்.எம். கைத்துப் பாக்கியை எடுத்து சத்யேந்தரின் நெற்றியில் சுட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் சத்யயேந்தரை அருகில் இருந்த லேடி ஹாடிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி செய்து, பின்னர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்குள் சத்யேந்தரின் உயிர் பிரிந்தது.
இதற்கிடையே, நீரஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். அவரை அங்கிருந்த பொது மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இவரை கைது செய்த டெல்லி மந்திரி மார்க் காவல்நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்துள்ள னர். அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் பணியாற்றும் இவர், ஏடிஎம்-களில் பணம் செலுத்த செல்லும் வங்கி வாகனத்தில் பாதுகாவலராக இருக்கிறார் என விசாரணையில் தெரியவந்தது.
கடந்த செப்டம்பர் 23-ல் டெல்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின் ஏட்டாவின் தாபாவில் ஆம்லெட்டில் வெங்காயம் போடாததால் ஆத்திரமடைந்த கிரிமினல்கள் அதன் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.