

மும்பை உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற் படையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றது.
மும்பை கடற்படை தளத்தில் இந்தக் கப்பல் மீது பறந்துகொண் டிருந்த கடற்படை கொடி நேற்று மாலை சூரியன் மறையும்போது கீழே இறக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணம் முடிவுக்கு வந்தது.
எச்எம்எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் இந்தக் கப்பல் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படை யில் இருந்து நீக்கப்பட்டது. இதை யடுத்து 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தக் கப்பல் தளத்திலிருந்து பல்வேறு வகை விமானங்கள் புறப்பட்டு 22,034 மணிக்கும் மேல் பறந் துள்ளன. 1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப் படை பணி யிலும் 1999-ல் கார்கில் போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டு மின்றி நிலத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது.
27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளது. உலகை 27 முறை சுற்றிவந்ததற்கு இது சமமாகும்.
கடைசியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப் பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணி யாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இவர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.
இக்கப்பலை விசாகப்பட்டினத் தில் நிறுத்தி, ஆடம்பர ஹோட்டலாக மாற்றவும் அதையொட்டி பொழுது போக்கு மண்டலம் ஏற்படுத்தவும் ஆந்திர அரசு விரும்புகிறது. ஆந்திர அரசின் விருப்பத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.