

ரூபாய் நோட்டு நடவடிக்கையில் பிரதமர் மோடி மக்களின் பணத்தை பிக்பாக்கெட் போல எடுத்துச் சென்றுவிட்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள யெச்சூரி, ''மோடி பிக்பாக்கெட் காரர் போல நடந்து கொள்கிறார். அவர்கள்தான் மக்களின் பாக்கெட்டை முதலில் சுரண்டுவார்கள். பின்னர் இப்போது மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் மோடி வெளியே வருகிறார்.
அவர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்களுக்கு உதவி செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
2014 லோக் சபா தேர்தலின்போது 90 சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை தான் மீட்கப் போவதாகவும் மோடி கூறியிருந்தார். ஆனால் அவர் என்ன செய்திருக்கிறார்?
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள கறுப்புப்பணம் முழுவதும் வெள்ளையாக்கப்படும்'' என்று தன் பதிவில் கூறியுள்ளார்.