அம்மா உணவகம் போல மலிவு விலை உணவகம்; கர்நாடக அரசு புது திட்டம்

அம்மா உணவகம் போல மலிவு விலை உணவகம்; கர்நாடக அரசு புது திட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தைப் போல கர்நாடகாவிலும் மலிவு விலை உணவகங்களை திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் பெங்களூரில் 'தி இந்து'விடம் வியாழக்கிழமை கூறியதாவது: கர்நாடகாவில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைஎளிய மக்களுக்கு ‘அன்ன பாக்யா' திட்டத்தின் மூலம் மாதந்தோறும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மாவட்ட தலைநகரங்கள், பொது மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மலிவு விலையில் உணவகங்களை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய அம்மா உணவகங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதால் அரசுக்கும் நற்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கர்நாடக அரசு கவனித்து வருகிறது.

ஏற்கெனவே மலிவு விலை உணவக திட்டத்தை கர்நாடகாவில் தொடங்க திட்டமிட்டிருந்தோம். அதற்காக 2 முறை முதல்வர் சித்தராமய்யா தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது. ஆனால் அதற்கான செயல் திட்டம் தயாரிப்பதில் முழுமையாக கவனம் செலுத்தப்படாததால் உடனடியாக தொடங்கப் படவில்லை.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் மலிவு விலை உணவகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து முதல்வர் சித்தராமய்யாதான் இறுதி முடிவெடுப்பார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in