

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வழக்கம் போல இந்த ஆண்டும் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த முறை ரூ.50 கோடி வரை பந்தயம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா, தெலங்கானாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் சேவல் சண்டைப் போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றது. சேவலின் காலில் கத்தியை கட்டி, பல கோடி ரூபாய் அளவுக்கு பந்தயம் வைத்து நடத்தப்படும் இந்தப் போட்டியை காண இரு மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் முதல் விவசாயிகள் வரை திரள்வர். இந்தப் போட்டியின்போது சேவலின் கால்களில் கத்தியை கட்டுவதால் தோல்வி அடையும் சேவல் உயிரிழப்பதை சுட்டிக்காட்டி இப்போட்டிக்கு தடை விதிக்குமாறு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து சேவலின் கால் களில் கத்தியை கட்டாமல் போட் டியை நடத்த அனுமதிக்கும்படி கோரி பந்தய ஏற்பாட்டாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனை களுடன் இப்போட்டியை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேவல் சண்டைக்கான போட்டிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு சேவல் போட்டியின்போது பந்தயமாக ரூ.100 கோடி வரை பணம் புரண்டது. ஆனால் இந்த முறை பணப்புழக்கம் குறைந்ததால், பந்தயப் பணத்தின் வசூலும் ரூ.50 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ஆந்திராவின் கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் கம்மம், வாரங்கல், மேடக் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தயாராகி வருகின்றனர்.