Last Updated : 24 Sep, 2016 08:30 PM

 

Published : 24 Sep 2016 08:30 PM
Last Updated : 24 Sep 2016 08:30 PM

காஷ்மீரின் பெயரால் அந்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது பாகிஸ்தான்: பிரதமர் மோடி பேச்சு

கோழிக்கோட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தார்.

கேரளாவின் கோழிக்கோடு நகரில் பாரதிய ஜனதாவின் தேசியக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மேலும் தீன் தயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கவிருக்கிறார் மோடி.

இந்நிலையில் மோடி பேசியாதவது:

கேரளா என்ற பெயர் தூய்மை என்ற அர்த்தத்தை நமக்கு கொடுக்கிறது. இந்த நாடு ரிஷிகளின் ஞானிகள் மற்றும் பிற மகாமனிதர்களின் இடமாகும். இவர்கள்தான் கேரளாவை பண்பாடு ரீதியாக அழகான மாநிலமாக உருமாற்றியவர்கள்.

கோழிக்கோட்டிற்கு வருகை தரும் இன்னொரு வாய்ப்பை பெற்றுள்ளேன். ஆனால் இப்போது பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன், கடந்த முறை மனித சங்கிலிதான் இருந்தது, தற்போது மனித சுவர் எழுந்துள்ளது.

சமீபத்தில் நான் வளைகுடா நாட்டுக்குச் சென்ற போது அங்கு மலையாளிகளை சந்திக்க விரும்பினேன். கேரள நாட்டினரின் கடமை உணர்வு குறித்து பிற நாட்டு தலைவர்கள் பாராட்டியதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன்.

இந்த நாடு நமக்கு 3 மிகப்பெரிய ஆளுமைகளை கொடுத்துள்ளது, ஒன்று காந்தி, இரண்டாவது தீன் தயாள் உபாத்யா, மூன்றாவது லோஹியா. கடந்த நூற்றாண்டில் இந்த 3 ஆளுமைகளைச் சுற்றியே இந்திய அரசியல் நடைபெற்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பாக தீன் தயாள் ஜன்சங்கத்தை ஏற்று நடத்தினார். ஊடகங்கள் இதற்கு எப்படி வினையாற்றின என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாஜக திகழ்கிறது.

வளர்ச்சியைப் பொறுத்தவரை கேரளாவிற்கு பெரிய ஆற்றல்கள் உள்ளன. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மீன்பிடித்துறை, வேளான் துறைகளில் வளர்ச்சியை பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் மத்திய அரசு நிறைய திட்டங்களை வகுத்து வருகிறது. நாம் பெரிய சவால்களைச் சந்தித்து வருகிறோம்.

தேசிய ஜனநாயகக்கூட்டணி என்னைத் தேர்ந்தெடுத்த போது ஏழைகள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உறுதிமொழி அளித்தேன். அது உபாத்யாவின் போதனைகளின் அடிப்படையிலானதே. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அடிப்படையில்தான் ஆட்சி செய்து வருகிறேன். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக என்னுடைய அனுபவச் செல்வங்களை கட்சியை வலுப்படுத்துவதற்காக செலவிட்டேன். ஆனால் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கட்சிக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கூறுவதெல்லாம், ‘உங்கள் தியாகம் வீண் போகாது’ என்பதையே.

காஷ்மீர், ராணுவம், பாகிஸ்தான்...

ஊடுருவலை நம் ராணுவ வீரர்கள் தடுத்து வருகின்றனர். நாம் நம் ராணுவ வீரர்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அந்த தைரியமான வீரர்களுக்குப் பின்னால் நம் நாட்டின் 125 கோடி மக்களின் பலம் உள்ளது.

காஷ்மீரின் யூரி பகுதியில் அண்டை நாட்டின் உதவியுடன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்தியா இதனை ஒருபோதும் மறந்து விடாது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். கடந்த சில மாதங்களில் இத்தகைய 17 சம்பவங்கள் நடந்துள்ளன .பலர் கொல்லப்பட்டனர். ஆனால் ராணுவத்தினரின் செயல்கள் பாராட்டுக்குரியது 110 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒசாமா பின் லேடன் போன்று குற்றத்திற்கு பின்னணியிலுள்ளவர்கள் அந்த நாட்டை பாதுகாப்பு புகலிடமாக கருதுகின்றனர். இந்த ஒருநாடுதான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. நம் ஒருநாடுதான் அகிம்சையை பரப்பி வருகிறது.

அனைத்து ஆசிய நாடுகளின் ஆசிய நூற்றாண்டு காண விழைகின்றனர். ஆனால் ஒரேயொரு நாடு பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. அது வளர்ச்சிக்கு பெரிய தடையாக உள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. வங்கதேசமாகட்டும் ஆப்கனாகட்டும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால் அந்த ஒருநாட்டின் பெயர்தான் அடிபடுகிறது.

வறுமையை ஒழிக்க ஆயிரமாண்டுகள் போராட இந்தியா தயாராக உள்ளது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம். சமூகத்தீமைகளான வறுமை, வேலையின்மையைப் போக்க பாகிஸ்தான் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் மக்களை அந்நாடு காஷ்மீரின் பெயரால் முட்டாள்களாக்கி ஏமாற்றி வருகிறது. இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது என்றால் அவர்களோ பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றனர்.

ஒருநாள் ஒரு காலம் வரும், பாகிஸ்தான் மக்களே பயங்கரவாதத்திற்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடுவார்கள். பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் உங்கள் கையிலா இருக்கிறது? இல்லை வங்கதேசம்தான் இப்போது உங்கள் கையில் இருக்கிறதா? சிந்து மாகாணம் உள்ளது, பலுசிஸ்தான் உங்களிடம் உள்ளது. ஆனால் அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? காஷ்மீரின் பெயரால் உங்களை ஏமாற்றுகிறது உங்கள் நாடு.

ஒரு தலைவர் தீவிரவாதி ஒருவரின் பேச்சை வாசிக்கிறார். ஆனால் நான் பாகிஸ்தான் மக்களிடம் பேச விரும்புகிறேன். 1947-க்கு முன்பாக உங்கள் மூதாதையர்கள் இந்தியாவை விரும்பியவர்கள்.

எனதருமை சக குடிமக்களே! சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவம் பயங்கரவாதத்தை முறியடிப்பது ஆயுதங்களால் மட்டுமல்ல, உங்கள் பிரார்த்தனையினாலும் கூட.

125 கோடி மக்களின் தேசப்பற்று நம் ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பது.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x