

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி 500 பக்கங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் சார்பில் 4 தொகுப்புகளுடன் கூடிய, 500 பக்கங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, தமிழகத்தில் 2012, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், தடை விதித்தபின், ஜல்லிக்கட்டு மாடுகள் அடிமாடுகளாக விற்கப்படும் பரிதாப நிலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் அனுமதித்து எத்தகைய நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தாலும் அவற்றை ஏற்கத் தயார் என்று தமிழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.