

இந்தியாவுக்கான தமது தூதரை நாடு திரும்பும்படி இத்தாலி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இத்தாலி கப்பலின் பாதுகாப்புப் படை வீரர்களால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை இந்திய அதிகாரிகள் கையாண்டவிதம் அதிருப்தி தருகிறது. அதுபற்றி முடிவு எடுத்திட ஆலோசனை நடத்துவதற்காக தமது தூதர் டேனியல் மான்சினியை நாடு திரும்பும்படி உத்தர விட்டுள்ளதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் எம்மா போனினி தெரிவித்தார்.
இத்தாலி வீரர்கள் இருவரையும் உடனடியாக நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதுதான் பிரதான நோக்கம் இந்த விவகாரத்தை சரியாக சமாளிக்க இந்தியா தவறிவிட்டது. இத்தாலி வீரர்களின் உரிமையை அங்கீகரிக்க சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தீவிரமாக முயற்சிப்போம் என்றார் போனினி.
மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தாலி கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் மாசிமிலியானோ லத்தோர், சால்வடோர் ஜிரோன் ஆகியோர் சம்பந்த மான விசாரணையை பிப்ரவரி 24-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்த நிலையில் தமது தூதரை இத்தாலி திரும்ப அழைத்துள்ளது. இந்த விசாரணை செவ்வாய்க்
கிழமை நடக்கும் என முன்னதாக அறிவிக்கப் பட்டிருந்தது. நாடு திரும்பும்படி தூதருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சரியான முடிவே. இது நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் மரியோ மவ்ரோ தெரிவித்தார். இதனிடையே, தனது நடவடிக்கை குறித்து இந்தியாவிடம் இத்தாலி தெரிவிக்கவில்லை என்று டெல்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆலோசனை நடத்துவதற்காக தமது தூதரை நாடு திரும்பும்படி இத்தாலி அழைத்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்க அவசியம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.