

நேற்று, பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாட்னா காவல்துறை கண்காணிப்பாளர் ஜயந்த் காந்த் கூறுகையில் : பாட்னா ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செதுள்ளனர்.
அவரது பெயர் இம்தியாஸ் அன்சாரி என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து, ஒரு டைரி, சில தொலைபேசி எண்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபருக்கு தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணையில் தேசிய புலனாய்வு நிறுவனமும் உதவி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பலி அதிகரிப்பு:
இதற்கிடையில், பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
ஜார்கண்டில் தேடுதல் வேட்டை:
குண்டு வெடிப்பு தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விடிய, விடிய தீவிர விசரணை நடத்தினர். பின்னர் இன்று காலையில் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள், அண்டை மாநிலமான ஜார்கண்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்தியாஸ் வீட்டில் குக்கர் வெடிகுண்டு:
பிடிபட்ட இம்தியாஸ் அன்சாரிசின் வீடு ராஞ்சியில், சித்தியோ காலனியில் இருக்கிறது. அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குக்கர் வெடிகுண்டு, ஒசாமா பின் லேடன் புகைப்படம், சில சி.டி.க்கள், வன்முறையை தூண்டும் சில ஆவணங்கள் ஆகியனவற்றை கைப்பற்றியுள்ளனர்.