இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கை வகுக்க குழு

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கை வகுக்க குழு
Updated on
1 min read

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமனம்

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக விண்வெளி விஞ்ஞானி கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமனம் செய்துள்ளது.

பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தேர்வு செய்துள்ளார்.

இக்குழு, கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்த பரிந்துரையை அரசிடம் அறிக்கை யாக சமர்ப்பிக்கும்.

இந்தக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவரான கஸ்தூரிரங்கனைத் தவிர, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ் கனம்தனம் இடம்பெற்றுள்ளார். இவர் கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இதுதவிர, மத்திய பிரதேசத்தில் உள்ள பாபா சாஹிப் அம்பேத்கர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராம் சங்கர் குரீல், கர்நாடக மாநில புத்தாக்க கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர் செயலர் டாக்டர் எம்.கே.ஸ்ரீதர், மொழி தொடர்பியல் நிபுணர் டாக்டர் டி.வி.கட்டிமணி, குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் பாரசீக மொழி பேராசிரியர் டாக்டர் மழர் ஆசிப் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் உத்தரபிரதேச மாநில முன்னாள் கல்வித் துறை இயக்குநர் கிரிஷன் மோகன் திரிபாதி, பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கணிதவியல் நிபுணர் மஞ்சுல் பார்கவா, மும்பை எஸ்என்டிடி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வசுதா காமத் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு முன்னாள் அமைச் சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இக்குழு ஏற்கெனவே சமர்ப்பித்த அறிக்கையும் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in