

செயல் அளவில் இருதரப்பு உறவை மேம்படுத்திக் கொள்வது என இந்திய, சீன ராணுவத்தின் எல்லைப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள இந்திய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கர்னர் எஸ்.டி.கோஸ்வாமி நேற்று கூறியதாவது:
புத்தாண்டை முன்னிட்டு, சீனாவின் தற்காலிக சந்திப்பு மையமான தவுலத் பெக் ஓல்டி (டிபிஓ) தியான்வென்டியனில் (உலகின் உயரமான மையம்) இருதரப்பு எல்லைப் பிரிவு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் கர்னல் ரின்சென் டோர்ஜி தலைமையிலான குழுவினரும் சீனா சார்பில் கர்னல் சாங் ஜாங் லி தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யின்போது டோர்ஜியும் சாங்கும் தனித்தனியாக உரை நிகழ்த்தினர்.
அப்போது, எல்லைப் பகுதியில் அமைதி நிலவவும், செயல் அளவில் இருதரப்பு உறவை மேம்படுத்திக் கொள்ளவும் இரு உயர் அதிகாரிகளும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். இந்த சந்திப்பு சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும், இணக்கமானதாகவும் அமைந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.