Last Updated : 16 Oct, 2014 08:55 AM

 

Published : 16 Oct 2014 08:55 AM
Last Updated : 16 Oct 2014 08:55 AM

பரப்பன அக்ரஹாராவில் குவியும் அதிமுகவினர்: மனு எழுதி கொடுத்துவிட்டு நாள் முழுவதும் காத்திருக்கின்றனர்

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான‌ ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்களும் அவரது கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் பரப்பன அக்ரஹரா சிறைக்கு வெளியே தினமும் குவிகின்றனர்.

ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மனு எழுதிக் கொடுக்கும் இவர்கள் நாள் முழுவதும் வெளியில் காத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மரத்தடியில் காத்திருப்பு

இதையொட்டி அதிமுகவினர் தினமும் ஆயிரக்கணக்கில் இங்கு குவிகின்றனர். தினமும் காலை 9 மணிக்கு வரும் அதிமுகவினர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக சிறை ஊழியர்களிடம் மனு எழுதிக்கொடுக்கின்றனர். பிறகு அங்கு சாலையோர மரத்தடியில் காத்திருக்கின்றனர். அமைச்சர்கள் மட்டும் இளையவர்களாக இருந்தாலும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆங்காங்கே சிலர் செய்தித்தாள்களை விரித்துப்போட்டு குட்டி தூக்கமும் போடுகின்றனர். அவர்களிடையே அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள் நடைபெறுவதையும் காணமுடிகிறது.

உணவுக்கு ஏற்பாடு

சிறை வளாகத்தில் குவியும் தொண்டர்களுக்கு அங்கேயே ஒரு கட்டிடத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாளும் கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் கவனித்துக்கொள்கின்றனர்.

நடந்தே வந்த அமைச்சர்கள்

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று பரப்பன அக்ரஹாரா பகுதியில் அதிமுகவினர் அதிக அளவில் காணப்பட்டனர்.

தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் வாகனங்களும் சிறை வளாகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு அதிமுகவினரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் சிறைக்கு வந்த தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜய பாஸ்கர் ஆகியோர் நடந்தே சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன், மாதவரம் மூர்த்தி, சி.வி.சண்முகம் ஆகியோரும் நேற்று சிறைக்கு வந்திருந்தனர். இவர்கள் தவிர அசோக்குமார், செல்வராஜ், ராமசந்திரன், ஜெயவர்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தனர். என்றாலும் இவர்கள் யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை.

ஜெயலலிதா சந்திக்காதது ஏன்?

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

இதற்கு அவர்கள் கூறும்போது, தினமும் அவரை பார்ப்பதற்காக தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.தன்னை பார்க்க யார் வருகிறார்கள். யார் வருவதில்லை என்று ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.

தான் எவரையாவது சந்தித்தால்,அதனை வைத்து அவர் வெளியில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிடுவார். இதனால் கட்சியிலும் ஆட்சியிலும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். எனவே தான் அவர் யாரையும் சந்திக்காமல் அமைதியாக கவனித்து வருகிறார்” என்றனர்.

சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க முடியாவிட்டாலும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் சசிகலாவையும், இளவ‌ரசியையும் சந்திக்கின்றனர்.

அவர்களிடம் ஜெயலலிதா கொடுத்து அனுப்பும் உத்தரவுகள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலருக்கு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x