

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை காந்தி என்ற தனி ஜாதிப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி வேலுகாந்தி, ‘ஜாதியற்ற சமூகத்தை அமைக்க, கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் காந்தி என்ற ஒரே ஜாதியால் குறிப்பிடப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
காந்தி என்ற ஜாதியால் அழைக்கப்படுவதன் மூலம் பழமையான ஜாதிய முறைகளால் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படமாட்டார்கள். ஒட்டு மொத்த இந்து மக்கள் 9,500 ஜாதிகளால் பிளவுபட்டுள்ளனர். முஸ்லிம்களிடையேயும் துணைப்பிரிவுகளால் வேறுபாடு நிலவுகிறது. ஜாதி வேறுபாட்டால் நாட்டில் பல்லாண்டுகளாக பாரபட்சம் நிலவுகிறது என அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை இந்த அமர்வு நிராகரித்து விட்டது. “மனுதாரரின் இம்மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம், உரிய தீர்வைப் பெற அவர் அரசுக்கு பரிந்துரை செய்யலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.