

தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்ட மாணவர்கள், கர்நாடகத்தில் சைவம் மற்றும் அசைவம் என உணவு மேலாண்மைப் படிப்பில் இரு பிரிவுகள் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து புனேவைச் சேர்ந்த சந்திரசேகர் லூனியா என்பவர் கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''படிப்புக்காக அசைவ உணவுகளைச் சமைக்கும் போது சைவ மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். செய்முறை வகுப்புகளில் அசைவ உணவு தயாரிப்பு கட்டாயப் பாடமாக உள்ளது. இதனால் அவர்களால் தன் பட்டப்படிப்பைத் தொடர்வதிலேயே குழப்பம் நிலவுகிறது.
இதனால் மாணவர்களுக்கு சைவம் மற்றும் அசைவம் என உணவு மேலாண்மைப் படிப்பில் இரு பிரிவுகள் வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இதுகுறித்து பதிலளித்த ஆசிரியர்கள், அசைவ உணவு செய்முறைப் பாடத்திட்டத்தில் கட்டாயம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
தென்னிந்திய சமையல் சங்க துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் இதுகுறித்துக் கூறும்போது, ''மாணவர்கள் தாங்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்த அசைவ உணவை சமைப்பது குறித்தும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
உணவக மேலாண்மை நிறுவனத்தின் முதல்வர் வெங்கடாத்ரி கூறும்போது, சில கல்லூரிகள் சைவ உணவுக்கான பாடப் பிரிவுகளை அனுமதித்திருப்பதாகக் கூறினார்.
'சைவ உணவுப் படிப்பு சாத்தியமில்லை'
இதுகுறித்துப் பேசிய உணவக மேலாண்மைப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர் விபோர் கேத்தன், ''இரண்டு வகையான பாடப்பிரிவுகள் சாத்தியமில்லை. சொல்லப்போனால் நானே சைவ உணவு உண்பவனாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் வேலைக்காக நிறுவனங்களில் சேரும்போது, சைவம்தான் சமைப்பேன் என்று கூறமுடியாது. இரண்டு வகை உணவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.