Published : 22 Dec 2013 18:11 pm

Updated : 06 Jun 2017 16:44 pm

 

Published : 22 Dec 2013 06:11 PM
Last Updated : 06 Jun 2017 04:44 PM

காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க முடியாது - ஏ.பி.பரதன் பேட்டி

மக்களவைக்கு 2014ல் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதால் அவை மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கு மாற்றாக இடதுசாரிகள், ஜனநாயக அமைப்புகள், பிராந்திய கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணி ஏற்படுத்த முயற்சி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது .

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் பரதன், சந்திப்புக்குப்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:


காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டுள்ளதால் அந்த கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு அறவே கிடையாது.

பாஜகவுக்கும் மக்களவைத் தேர்தலில் போதிய இடங்கள் கிடைக்காது என்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் பாடுபடவேண்டும்.

காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை உள்ளடக்கி புதிய மாற்று அணியை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. இடதுசாரிகள், பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக ஆகிய பிராந்திய கட்சிகளை சேர்த்து தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி அமைக்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்.

பல்வேறு பிராந்திய கட்சிகள் மத்திய அரசில் இடம்பெறவில்லை. காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான இந்த கட்சிகளுடன், மாநில அளவில் பேசி ஒரு முடிவுக்கு வருவது பற்றியோ அல்லது கூட்டணி அமைப்பது பற்றியோ இடதுசாரி கட்சிகள் முனைப்பு காட்டவேண்டும்.

டெல்லியில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 28ஐ வென்றதன் மூலமாக வாக்காளர்கள் மாற்று தேடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. எனவே இதுபற்றி நன்கு ஆராய்ந்து மாற்று அணி அமைப்பது பற்றி யோசிக்கவேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அதிக அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்கிற முடிவுக்கு வந்துள்ள வாக்காளர்கள் அந்த கட்சியை ஒதுக்குகின்றனர். பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், அத்தியாவசியப்பொருள்களின் விலைவாசி உயர்வு போன்ற வற்றுக்கு தீர்வு காண தவறி விட்டதற் காகவும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசம் அதிகாரம் செல்லாது என்பது தெளிவாக தெரிகிறது. அந்த கட்சி மொத்தத்தில் 110 மக்களவைத் தொகுதிகளை வென்றால் அதுவே மலைப்பான சாதனையாகும்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டாலும் நிலைமை மாறிவிடப்போவதில்லை.

பாஜக பற்றி மிகைப்படுத்தி பிரமிப்பாக சிலர் பேசினாலும் அதுவும் நடக்கப்போவதில்லை. அடுத்தமக்களவைத்தேர்தலில் 140 அல்லது 150 இடங்களில் பாஜக வெற்றிபெறக்கூடும். காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சற்று கூடுதல் எண்ணிக்கையில் பாஜக வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.

நரேந்திர மோடி அலை இல்லை

நாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அலை வீசுவதாக கூறப்படுவதெல்லாம் தவறானது. பெரிய தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை திட்டமிட்டு பரப்பிவிடும் பிரசாரம் இது. அவரை பிரபலப்படுத்துவதற்காக முதலாளித்துவ சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றன.

அடுத்த தேர்தலில் ராகுல் மோடி இடையேதான் போட்டி என்கிற கருத்து பரவுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறு. மக்கள் தேர்வு செய்வதற்கு இந்த 2 பேர்தான் என்றில்லாமல் விசாலமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார் பரதன்.

நவீன் பட்நாயக்கிடம் நடத்திய ஆலோசனை பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது: தேர்தலுக்கு அவகாசம் இருப்பதால் ஜனவரி அல்லது பிப்ரவரி ஆரம்பத்தில் கூட்டணி பற்றி பேசலாம் என்று தெரிவித்தார் பட்நாயக்.எனவே விரிவான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி அவசியம் என்பதை நான் அவரிடம் எடுத்துரைத்தேன் என்றார் பரதன்.


இந்திய கம்யூனிஸ்ட்ஏ.பி.பிரதன்நரேந்திர மோடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x