Published : 18 Jun 2016 07:49 AM
Last Updated : 18 Jun 2016 07:49 AM

விலங்கு, பறவைகளின் உடலைப் பதப்படுத்தும் நிபுணர்

சந்தோஷ் கெய்க்வாட். விலங்குகள், பறவைகள் உடலைப் பதப்படுத்தும் நிபுணர். இந்தியாவில் இத்துறையில் தற்போது ஈடுபட்டிருக்கும் ஒரே நிபுணர் மட்டுமல்ல, வனவிலங்குகளின் உடலைப் பதப்படுத்த அரசு அனுமதி அளித்திருக்கும் நபரும் இவர் மட்டுமே.

சந்தோஷ் கெய்க்வாட் விலங்குகள், பறவைகளின் உடல்களைப் பதப்படுத்தும் துறையில் கடந்த 13 ஆண்டுகளாகத்தான் செயல்பட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் பறவைகளின் உடலை தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைத்து, அதனைப் பதப்படுத்தி வந்துள்ளார். ஆனால், அவரின் மனைவி முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கவில்லை. அச்சத்துடனே அணுகி வந்துள்ளார்.

தற்போது, இந்தியாவின் ஒரே, விலங்கு, பறவைகள் உடலைப் பதப் படுத்தும் டாக்ஸிடெர்மி மையத்தின் தலைவராக உள்ளார் சந்தோஷ். மும்பை தேசிய பூங்காவில் அமைந்துள்ள இம் மையத்தில் பெரிய சிங்கத்தின் உடலையே வைக்கும் அளவுக்கு இரு பெரிய பிரீஸர்கள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

“இறந்த பறவைகளின் உடலை வீட்டு பிரீஸரில் வைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அந்த பறவைகள் எப்படி இறந்தன என்று நமக்குத் தெரியாது.

எனவே, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் விஷத்தன்மை அடைந்து விடும் என்ற பயம் மனைவிக்கு இருந்தது. அதனால், இரண்டு மூன்று பாலித்தீன் பைகளில் அந்த உடலை அடைத்துத்தான் பிரீஸருக்குள் வைப்பேன்” என கெய்க்வாட் தெரிவித்தார்.

பாம்பே கால்நடை மருத்துவக் கல்லூரி யில் சந்தோஷ் கெய்க்வாட் உடற்கூறியல் பேராசிரியராக பணி புரிகிறார். அங்கிருந்து இறந்த பறவைகளின் உடல்களை எடுத்து வருகிறார். அரசுத் துறைகளில் இருந்தும், வளர்ப்புப் பிராணிகள் ஆர்வலர்களிடம் இருந்தும் உடல்கள் தற்போது கிடைத்து வருகின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் விலங்குகளின் உடலைப் பதப்படுத்தும் முறை மிகவும் பிரபலம். மகாராஜாக்களும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் வேட்டை யாடிய விலங்குகளின் உடலைப் பதப் படுத்தி தங்களின் மாளிகைகளில் ஆடம் பரமாக வைத்து, அதன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

ஆனால், சுதந்திர இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இதற்கு தடை விதித்தது. எனவே, உடலைப் பதப்படுத்தும் கலையும் வழக்கொழிந்தது.

இயற்கையாகவோ, விபத்து காரணமாகவோ இறக்கும் வனவிலங்கு களின் உடலை, அருங்காட்சியகங்களில் வைப்பதற்கான கோரிக்கையுடன் வந்தால், அதனை பதப்படுத்தித் தருகிறார் கெய்க்வாட். வளர்ப்புப் பிராணிகள் இறந்து விட்டால், அவற்றையும் பதப்படுத்தித் தருகிறார் இவர்.

இதுதொடர்பாக சந்தோஷ் கெய்க்வாட் கூறியதாவது:

விலங்குகள், பறவைகளின் உடலைப் பதப்படுத்துவது என்பது, சிற்பம், ஓவியம், தச்சு, தோல் தையல், உடற்கூறியல் என ஐந்து கலைகளின் சங்கமம். விலங்கு இறந்த உடனே தோலை உரிக்க வேண்டும். எஞ்சிய சதைகளைக் கவனமாக நீக்க வேண்டும். விலங்கின் உடல் அளவை எடுத்துக் கொண்டு அதே அளவு, நிறையுள்ள மாதிரி உடலமைப்பை உருவாக்குகிறோம்.

பின்னர், பதப்படுத்தப்பட்ட உண்மை யான தோல், அந்த மாதிரி உருவத்தின் மீது போர்த்தப்பட்டு, கண்ணாடி கண்கள் உள்ளிட்ட இதர உறுப்புகளை ஒப்பனை செய்து பதப்படுத்தப்பட்ட உருவம் உருவாக்கப்படுகிறது.

இதுவரை சைபீரியன் உட்பட பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம், புலி சிறுத்தைகள் என 13 விலங்குகள், இமாலயன் கருப்புக் கரடி, 500-க்கும் அதிகமான பறவைகள், 100-க்கும் அதிக மான மீன்கள், ஊர்வன ஆகியவற்றைப் பதப்படுத்தியுள்ளேன்.

பறவைகளுக்கு ரூ. 3,000, நாய்களுக்கு அவற்றின் இனம், உருவத்தைப் பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறேன்.

2003-ம் ஆண்டு மும்பை அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் உருவத்தைப் பார்த்து, அதுதொடர்பாக கற்றுக்கொள்ள ஆர்வம் வந்தது. யாரும் கற்றுத்தர முன்வரவில்லை. எனவே, இணையதளத்தில் தேட ஆரம்பித்தேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இதற்கான நடைமுறைகளைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் இணையத்தில் தேடி விவரங்களைச் சேகரித்தேன்.

ஆரம்பத்தில் தோல்வி ஏற்பட்டது. பின்னர் பறவைகளை நன்கு பாடம் செய்யக் கற்றுக் கொண்டேன். பின் மீன்கள் எனப் படிப்படியாக அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன்.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய உடல் பதப்படுத்தும் கலை தொடர்பான படிப்பு இந்தியாவில் இல்லை. இந்தியாவில் விலங்குகளைப் பதப்படுத்தும் நபர் நான் மட்டுமே உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வழக்கமான பணிகளை மேற்கொண்ட பிறகு, கூடுதலாக இதனைச் செய்து வருவதால், ஒரு புலி அல்லது சிங்கத்தைப் பதப்படுத்துவதற்கு சுமார் ஆறு மாதம் அவகாசம் தேவைப்படுகிறது கெய்க்வாட்டுக்கு.

புதுடெல்லியில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிய பொக்கிஷங்கள் நாசமானது குறித்து கெய்க்வாட் கவலை தெரிவித்துள்ளார். உடலைப் பதப்படுத்தும் கலை என்பது புனர்ஜென்மம், இறந்த பிறகான வாழ்க்கை என்கிறார் கெய்க்வாட்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x