

கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து 16 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை தொடர்வதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி 124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 69.95 அடியாக அதிகரித் துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,900 கனஅடி நீர் வந்துகொண்டி ருப்பதால், வினாடிக்கு 1,208 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய காவிரியின் முக்கிய துணை நதிகளுக்கும் நீர்வரத்து தலா 1,500 கன அடியை கடந்துள்ளதால், இரு அணைகளின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் காவிரியின் முக்கிய நதியான கபினி உற்பத்தி யாகும் கேரள மாநிலம் வய நாடு மலைப்பகுதியில் கடந்த 3 தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. கபினி அணை அமைந் துள்ள மைசூரு மாவட்டத்தில் ஹெச்.டி.கோட்டை தாலுகாவிலும் கனமழை பெய்து வருவதால் கபினி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கபினி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் கன மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி யாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.கபினி அணைக்கான நீர்வரத்து திடீரென 15 ஆயிரத்தை கடந்துள்ளதால், கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வயநாடு மலைப் பகுதியில் இதே அளவு மழை தொடர்ந்தால், இன்னும் 15 தினங்களில் கபினி அணை முழு கொள்ளளவை எட்டும். அதன்பிறகு கர்நாடக விவசாயிகளுக்கும், மேட்டூர் அணைக்கும் நீர் திறக்கப்படும் என காவிரி நீர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.