Published : 09 Oct 2014 15:45 pm

Updated : 09 Oct 2014 15:45 pm

 

Published : 09 Oct 2014 03:45 PM
Last Updated : 09 Oct 2014 03:45 PM

தோல்விக்கு காரணங்களும் திரும்பத் திரும்பப் பேசும் தோனியும் - ஓர் அலசல்

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து அதற்கான காரணத்தை தோனி 'கண்டுபிடித்துள்ளார்.'

அதாவது விக்கெட்டுகளை மடமடவென இழந்ததால் தோல்வி என்ற தனது ‘கண்டுபிடிப்பை’ அவர் வெளியிட்டுள்ளார்.

"320 ரன்களைத் துரத்தும் போது விரைவாக விக்கெட்டுகளை இழந்தால் பேட்ஸ்மென்களுக்கு கடினமாகப் போய்விடும். அடுத்தடுத்து குறைந்த இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடி ரன்களைச் சேர்ப்பது முக்கியம்.

தொடக்கம் நன்றாகவே இருந்தது. அஜிங்கிய ரஹானேயின் ரன் அவுட்டிற்குப் பிறகு விக்கெட்டுகள் சரிவதை நிறுத்த முடியவில்லை” என்று போட்டியை பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றை ‘கண்டுபிடிப்பு’ போல் வெளியிட்டுள்ளார் தோனி.

அனைத்தையும் விட விசித்திரமானது, இந்திய 'பவுலர்கள் ஓரளவுக்கு டீசண்டாக வீசினர்' என்று அவர் கூறியிருப்பது:

“கொச்சி ஆட்டக்களம் பேட்டிங் களமாகும். ஸ்பின் பந்து வீச்சில் பந்துகள் திரும்பவில்லை. புவனேஷ் தவிர மீதி பவுலர்கள் ரன்களை கூடுதலாக வழங்கினர். இந்தப் பிட்சில் 320 ரன்கள் என்பது பவுலர்கள் ஓரளவுக்கு டீசண்டாக வீசியதையே உணர்த்துகிறது.

இறுதி ஓவர்களில் பவுலர்கள் சிறப்பாகவே வீசினர். மைதானம் பெரிதானதல்ல, இதில் 320-325 என்ற இலக்கு பெரிதல்ல” என்றார்.

ஏன் பேட்டிங் சரிவு ஏற்பட்டது என்பதைத்தான் ஒரு கேப்டன் கூற வேண்டும், ஆனால் அவரோ விரைவாக விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வியடைந்தோம் என்கிறார். இதைத்தான் போட்டியைப் பார்த்த அனைவரும் அறிவார்களே?

320 ரன்கள் ஒரு இலக்கேயல்ல எனும்போது, பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகம் என்று அவரே கூறும்போது, பேட்ஸ்மென்கள் ஏன் சொதப்பினர் என்பதற்கான காரணத்தை அல்லவா அவர் கூறியிருக்க வேண்டும்? டேரன் சாமியின் ஒன்றுமேயில்லாத நேர் பந்துக்கு தோனியே பவுல்டு ஆகி வெளியேறினார். மர்லான் சாமுயெல்ஸ் நேர் பந்துகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். கோலி மிகச்சாதாரணமான ஒரு லெக் கட்டர் பந்தில் வெளியேறுகிறார். ரெய்னா நல்ல பார்மில் இருக்கும் போதே தாமதமாக மட்டையை பந்தருகேக் கொண்டு வந்து, உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆகிறார்.

ராயுடு நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் ஆந்த்ரே ரசல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடித்து அவுட் ஆகிறார்.

321 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது ஒரு கேப்டனாக அணி வீரர்களுக்கு என்ன உத்தியக் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி தோனி கூறியது என்ன? நடந்தது என்ன? என்பதையல்லவா அவர் விளக்கியிருக்க வேண்டும்?

மைதானம் சிறியது, பேட்டிங் பிட்ச் என்றால் டாஸ் வென்று முதலில் பேட் செய்திருக்க வேண்டியதுதானே? அந்த விதத்தில் எதிரணியை பேட் செய்ய அழைத்தது தவறு என்பதை ஒப்புக் கொள்வதிலும் தோனிக்கு பிரச்சினைகள் உள்ளன போலும்.

இறுதி ஓவர்களில் ஓரளவுக்கு சிக்கனம் காட்டினோம் என்கிறார். சிக்கனப் படுத்தியுமே கடைசி 10 ஓவர்களில் 81 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி 15 ஓவர்களில் 133 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஓவருக்கு 9 ரன்கள் பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி ‘டீசண்ட்’ பவுலிங் ஆகும்?

ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஒப்பேற்றும் விதமாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார் தோனி. முன்பெல்லாம் போட்டிகளை நேரிலோ, தொலைக்காட்சியிலோ காண முடியாது. அதனால் ஒப்பேற்றும் பதில்களே ஏதோ உண்மையான பதில்களாக ரசிகர்களுக்குத் தெரியக்கூடும். இப்போது அனைத்தும் வெட்ட வெளிச்சமாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஒரு கேப்டன் தோல்வியை அறுதியிடுவதில் எவ்வளவு கறாராக இருக்க வேண்டும்? ஆனால் நம்மவர் ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

இந்தத் தொடரில் புதிதானவற்றை பரிசோதனை செய்வேன் என்றார், பந்து வீச்சு மாற்றம், கள அமைப்பு, பேட்டிங் வரிசை என்று எதிலும் அவர் எந்த விதப் பரிசோதனையையும் மேற்கொள்ளவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதிதாக வந்திருக்கும் குல்தீப் யாதவ் என்ற இடது கை லெக்ஸ்பின்/கூக்ளி பவுலருக்கு வாய்ப்பளிக்கும் ஒரு சிறிய சோதனை முயற்சியைக் கூட தோனி செய்யவில்லை.

பந்து வீச்சு நன்றாக இருந்தது அதனால் 321 ரன்களுக்கு மே.இ.தீவுகளை மட்டுப்படுத்தினோம், பேட்டிங்கில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தது, ஆனால் இது பேட்டிங் பிட்ச் இப்படி முரண்படும் கூற்றுகளைக் கூறி சாமர்த்தியமாக ஒப்பேற்றி வருகிறார் தோனி.


கொச்சி ஒருநாள் போட்டி தோல்விஇந்தியாமே.இ.தீவுகள்தோனியின் கருத்துகிரிக்கெட்

You May Like

More From This Category

More From this Author